கிரிக்கெட் (Cricket)

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்துடன் இன்று மோதல்

Published On 2025-01-28 07:56 IST   |   Update On 2025-01-28 07:56:00 IST
  • ராஜ்கோட் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது.
  • இங்கு இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்கோட்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன்ஷா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

முதல் இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் களம் இறங்கும் இந்திய அணி தொடரை வசப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோர் பேட்டிங்கிலும், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர். ேகப்டன் சூர்யகுமார் யாதவ் இரு ஆட்டத்திலும் (0, 12 ரன்) சோபிக்கவில்லை. அதனால் இன்றைய ஆட்டத்திலாவது ரன் மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் இரு ஆட்டத்திலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் உடல்தகுதியுடன் இருக்கிறார். ஆனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பாரா? இல்லையா? என்பதை பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் சூர்யகுமாரும் தான் முடிவு செய்வார்கள் என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோட்டாக் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் ஜோஸ் பட்லர் (68 மற்றும் 45 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் இரு ஆட்டத்திலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மிரளுகிறார்கள். இதே போல் பந்து வீச்சும் சீராக இல்லை. முந்தைய ஆட்டத்தில் அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கினார்.

இது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் கூறுகையில், 'நாங்கள் விக்கெட்டுகளை கைப்பற்றவே முயற்சிக்கிறோம். அதனால் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது குறித்து கவலையில்லை. ஆட்டத்தில் நாங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதைத் தான் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லமும் விரும்புகிறார்' என்று குறிப்பிட்டார். தொடரில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இங்கிலாந்து வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம்.

ராஜ்கோட் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் சதத்தால் 228 ரன்கள் குவித்து எளிதில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நடப்பு தொடரில் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. இரவில் பனிப்பொழிவில் பந்து வீசுவது சிரமம் என்பதால் 'டாஸ்' வெல்லும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News