கே.எல்.ராகுல் நிதான ஆட்டம்: இறுதி நாளில் இந்தியா வெற்றி பெற 135 ரன்கள் தேவை
- இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் கடந்து 100 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 74 ரன்னிலும், ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அணி துல்லியமாக பந்து வீசியது. ஜோ ரூட் 40 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கருண் நாயர் 14 ரன்னும் சுப்மன் கில் 6 ரன்னும், ஆகாஷ் தீப் ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
நான்காம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா வெற்றி பெற 135 ரன்னும், இங்கிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டும் தேவைப்படுவதால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.