கிரிக்கெட் (Cricket)
null

ஜூரல் அவுட் ஆனதும் டிக்ளேர் செய்த இந்தியா- முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவிப்பு

Published On 2025-10-11 13:58 IST   |   Update On 2025-10-11 14:12:00 IST
  • ஜூரல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • சுப்மன் கில் 129 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

புதுடெல்லி:

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த நிதிஷ் குமார், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவ்வபோது பவுண்டரியும் சிகருமாக பறக்க விட்டார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

அதிரடியாக விளையாடி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் 43 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஜூரல் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்திருந்தது. சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10-வது சதம் ஆகும். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜூரல் 44 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Tags:    

Similar News