தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 189 ரன்னில் இந்தியா ஆல் அவுட்
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார். கே.எல். ராகுல் 13 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 132 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னும், கே.எல்.ராகுல் 39ரன்னும், ரிஷப்பண்ட் 27 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் இருந்தபோது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா-துருவ் ஜூரல் ஜோடி ஆடி வருகிறது.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஜடேஜாவும், ஜூரலும் தொடர்ந்து ஆடினார்கள்.
ஜூரல் 14 ரன்னிலும் ஜடேஜா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்தீப் 1, சிராஜ் 1, பும்ரா 1, அக்ஷர் படேல் 16 என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.