கிரிக்கெட் (Cricket)

கே.எல்.ராகுல் சதம்: இந்தியா முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2025-07-12 22:55 IST   |   Update On 2025-07-12 22:55:00 IST
  • இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • ராகுல் சதமடிக்க, ரிஷப் பண்ட், ஜடேஜா அரை சதம் கடந்தனர்.

லார்ட்ஸ்:

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.

இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார். கே எல் ராகுல் சதம் கடந்து அசத்தினார்.

4வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப் பண்ட் 74 ரன்னில் அவுட்டானார். சதம் கடந்த நிலையில் கே.எல்.ராகுல் அவுட்டானார்.

ரவீந்திர ஜடேஜாவுடன் நிதிஷ்குமார் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News