முகமது சிராஜ் பணிச்சுமை என்பதை மதிப்பிழக்க செய்துவிட்டார்: சுனில் கவாஸ்கர் பாராட்டு..!
- பரபரப்பான கடைசி டெஸ்டில், 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
- இந்தியா வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் அபாரமான பந்து வீசினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக விளையாடினார். ஓய்வு அளிக்கப்படாமல் 5 போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட்டார். 5 போட்டிகளில் தொய்வின்றி பந்து வீசினார். கடைசி போட்டியின் 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.
பணிச்சுமை காரணமாக பும்ரா இடம் பெறாத நிலையில், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கடைசி டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
முகமது சிராஜ் ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து பந்து வீசியதை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கவாஸ்கர் முகமது சிராஜ் குறித்து கூறியதாவது:-
இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது கவுரவம். நீங்கள் 140 கோடி மக்களை பிரதிநிதித்துவம் படுத்துகிறீர்கள். அதைத்தான் நாங்கள் முகமது சிராஜில் பார்த்தோம். சிராஜ் தனது எனர்ஜியை முழுமையாக வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அவர் பணிச்சுமையின் என்பதை நீக்கிவிட்டார். பணிச்சுமை என்ற வார்த்தை இந்திய கிரிக்கெட் அகராதியிலிருந்து நீக்கப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.
ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.