வீடியோ: டாஸில் எப்படியும் தோல்விதான்.. ரன் அப் எடுக்க போகலாம்.. முதல் முறையாக டாஸ் வென்ற கில்லை கலாய்த்த வீரர்கள்
- சுப்மன் கில் கேப்டனாக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- டாஸில் தோல்வியடைந்து விடுவார் என்று பும்ரா, ரன் அப்புக்கு புறப்பட்டார் என கம்பீர் சிரித்தப்படி கூறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது.
முன்னதாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக டாஸை வென்றுள்ளார்.
சுப்மன் கில் டாஸ் வென்றதை பின்னாடி இருந்த பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஜடேஜா, அக்ஷர் படேல், பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் ஒருவழியா டாஸில் வெற்றி பெற்று விட்டார் என்பது போல சிரித்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வந்த கில்லுக்கு சக வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் பாராட்டினர். அப்போது கம்பீர் கில்லிடம் நீ எப்படியும் டாஸில் தோல்வியடைந்து விடுவாய் என பும்ரா பவுலிங் போடுவதற்கு ரன் அப்புக்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார் என சிரித்துக் கொண்டே கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.