ஆசிய கோப்பை 2025: சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்குமா UAE? கடைசி லீக்கில் இன்று பலப்பரீட்சை
- பாகிஸ்தான், UAE அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
- இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய், அபு தாபி) நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் பிரிவுகளுக்கான லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன.
இதில் நான்கு அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி விட்டன. இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் UAE ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றான சூப்பர் 4-க்கு முன்னேறியுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து வாய்பை இழந்தது.
பாகிஸ்தான், UAE அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இதனால் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். இதனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுவார்கள்.
ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக UAE, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த நம்பிக்கையடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக களம் இறங்கும்.
அதேவேளையில் UAE சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள அந்த அணி வீரரக்ள் விரும்புவாரக்ள். ஐக்கிய அரபு அமீரகததின் தொடக்க ஜோடிகளான அலிஷன் ஷரஃபு, கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக இருவரும் மாயாஜாலம் நிகழ்த்தினால் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது.