கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரகம் எளிதாக வெற்றி- அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன்

Published On 2025-09-15 21:15 IST   |   Update On 2025-09-15 21:15:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் விளாசினர்.
  • ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான அலிஷன் ஷரபு- கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 ஓவரில் 88 ரன்கள் குவித்த போது இந்த ஜோடி பிரிந்தது. ஷரஃபு 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வாசீம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார். முகமது சோகைப் 13 பந்தில் 21 ரன்களும், ஹரிஷித் கவுசிக் ஆட்டமிழக்காமல் 8 பந்தில் 19 ரன்களும் விளாசினர். ஓமன் அணியின் ஜித்தன் ராமநந்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் 10 பந்தில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் 4 வீரர்கள் தொடர்ந்து ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆர்யன் பிஷ்ட் 32 பந்தில் 24 ரன்களும், வினாயக சுக்லா 17 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஓமன் 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

ஐக்கிய அரபு அமீரகம் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. ஏறக்குறைய ஓமன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா 2 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

Tags:    

Similar News