ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை வெற்றியோடு முடிக்குமா இங்கிலாந்து? - கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
- உஸ்மான் கவாஜா இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியோடு வழியனுப்ப தீவிரம் காட்டுவார்கள்.
- மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மெல்போர்னில் நடந்த முந்தைய டெஸ்டில் இரு நாளுக்குள் அடங்கியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான ஆஸ்திரேலியா சரிவில் இருந்து வலிமையாக மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அத்துடன் மூத்த வீரர் உஸ்மான் கவாஜா இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியோடு வழியனுப்ப தீவிரம் காட்டுவார்கள். ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாட் மர்பி களம் காண்கிறார்.
அதே சமயம் மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர். இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-3 என்ற கணக்கில் முடிக்க ஆர்வமாக உள்ளனர். எதிரணியின் பந்து வீச்சு எப்படி இருந்தாலும் தொடர்ந்து ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிப்போம் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி கூறியுள்ளார். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
மெல்போர்னில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்களை வைத்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு தாறுமாறாக கைகொடுத்ததுடன், மோசமான ஆடுகளம் என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியது. அதனால் சிட்னி ஆடுகளம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து சிட்னி ஆடுகள பராமரிப்பாளர் ஆடம் லீவிஸ் கூறுகையில், 'போட்டிக்கு 3 நாட்கள் இருக்கும் போது ஆடுகளம் பசுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். புற்கள் எதுவும் தென்படவில்லை என்றால் அது தான் கவலைக்குரிய விஷயம். இன்று (ேநற்று) காலை கொஞ்சம் வெயில் அடித்தது. நாளையும் (இன்று) வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது ஆடுகளத்தில் உள்ள பசுமையை நீக்கி விடும். தற்போதைக்கு ஆடுகளத்தன்மை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். போட்டி 5-வது நாள் வரை நீடிக்கும் என்று நம்புகிறேன்' என்றார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.