2-வது டெஸ்ட்: இவர்கள் நமது சிறந்த ஸ்பின்னர்களா? கம்பீரை விளாசிய சவுரவ் கங்குலி
- 2-வது டெஸ்டில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
- ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
பிர்மிங்காம்:
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. சாய் சுதர்சன், பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதன்மூலம் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் குல்தீப் யாதவ் இல்லாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி தங்களின் சிறந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது. இதுவே இந்தியாவுக்கு வெற்றி பெற சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி ரன்களைக் குவித்தால், அது வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.
பிட்ச்சில் சிறிது சுழற்சி இருக்கும் நிலையில், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாதது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.
என்று கங்குலி கூறினார்.