கிரிக்கெட் (Cricket)

ஆண்கள் டி20 உலக கோப்பைக்கு நிகர்..! மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டியை 18.5 கோடி பேர் கண்டுகளிப்பு

Published On 2025-11-08 13:23 IST   |   Update On 2025-11-08 13:23:00 IST
  • பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
  • இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சம்.

சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பையை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதிய இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் 18.5 கோடி பேர் நேரலையில் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியையும் 18.5 கோடி பேர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் கண்டுகளித்து உள்ளனர்.

இதன் மூலம் ஆண்கள் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு இணையான பார்வைகளை மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றொரு சிறப்பான சாதனையையும் படைத்துள்ளது. இந்த போட்டி தொடர் முழுவதையும் சேர்த்து ஜியோஹாட்ஸ்டாரில் 44.6 கோடி பார்வைகள் பதிவாகியுள்ளன.

கடந்த 3 உலகக் கோப்பைத் தொடரின் பார்வைகளையும் ஒன்றாக சேர்த்து கிடைக்கும் பார்வைகளின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது தரவுகள் மூலம் தெளிவாகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பும் வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்தியா-தென் ஆப்பி ரிக்கா மோதிய இறுதிப் போட்டி சராசரியாக ஒரு நாளில் ஐ.பி.எல். தொட ருக்கு கிடைக்கும் பார்வை களைக் காட்டிலும் அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ள தும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News