2-வது இந்தியன் ஓபன் ஜம்ப்ஸ் போட்டி: புதிய சாதனை படைத்த தூத்துக்குடி தடகள வீரருக்கு கனிமொழி பாராட்டு
- ஜேஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனையை படைத்தார்.
- இதற்கு முந்தைய தேசிய சாதனையை காட்டிலும் 0.6 மீட்டர் இது அதிகம்.
பெல்லாரி:
2-வது இந்தியன் ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில் நீளம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் ஜேஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனையை படைத்தார். இதற்கு முந்தைய தேசிய சாதனையை காட்டிலும் 0.6 மீட்டர் இது அதிகம்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது மூன்றாவது முயற்சியில் அவர் இந்தச் சாதனையை படைத்திருந்தார். இதன்மூலம் எம்.ஸ்ரீசங்கர் வசம் இருந்த தேசிய சாதனையை அவர் தகர்த்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்தவரான ஜேஸ்வின் ஆல்ட்ரினுக்கு திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி டுவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இது குறித்து கூறியதாவது:-
தூத்துக்குடியைச் சேர்ந்த தடகள வீரர் @AldrinJeswin கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதல் பிரிவில் 8.42 மீ நீளம் தாண்டி, புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
வீரர் ஜேஸ்வின் ஆல்ட்ரின் மேலும் பல சாதனைகளைப் படைத்து நாட்டிற்குப் பல பதக்கங்களை வென்று வர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.