விளையாட்டு
ஆன்டி ஃப்ளவர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆன்டி ஃபிளவர் விலகல்?

Published On 2022-02-05 02:21 IST   |   Update On 2022-02-05 02:21:00 IST
ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்பதற்காக முல்தான் சுல்தான்ஸ் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆன்டி ஃப்ளவர் பாதியிலேயே வெளியேறி உள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ஃபிளவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முல்தான் சுல்தான்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். 

நடப்பு சாம்பியனான முல்தான் சுல்தான்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் 2022 சீசனில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாக் அவுட்டுக்கு தகுதி பெறும் முதல் அணியாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டிஃபிளவர் பாதியிலேயே வெளியேறி உள்ளார். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் 
இடம் பிடித்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பிளவர் பங்கேற்க உள்ளார். 

இதற்காக பெங்களூருவில் அவர் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானின் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு அவர் தொடர்ந்து பயிற்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பின்னவடைவாக கருதப்படுகிறது.

எனினும் பிப்ரவரி 13 தேதி பிறகு ஆன்டிஃபிளவர்  பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிப்ரவரி 16ந்தே கராச்சி கிங்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஆண்டி ஃப்ளவர் பயிற்சி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம்  ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அவர் இந்தியா திரும்புவார் என தெரிகிறது.

Similar News