விளையாட்டு
ஆசஷ் தொடரில் படுதோல்வி: இங்கிலாந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து சில்வர்வுட் விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக இயக்குனராக முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆசஷ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட அந்த தொடரை 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்தது. ஒரு டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது.
ஆசஷ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன் ஜோ ரூட் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆசஷ் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஆஷ்லே ஜைல்ஸ் விலகினார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து சில்வர் வுட் விலகியுள்ளார். அவரை பயிற்சியாளர் பதவியில் ஆஷ்லே ஜைல்ஸ் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷ்லே ஜைல்ஸ் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலகிய மறுநாளே சில்வர் வுட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சில்வர்வுட் கூறும் போது, ‘இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய கவுரவம். இங்கிலாந்து வீரர்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து பணியாற்றியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அணியுடன் எனது நேரத்தை மிகவும் ரசித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் கூறும் போது, ‘இங்கிலாந்து ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர்வுட் விலகியுள்ளார். அவரது எதிர்காலத்துக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக இயக்குனராக முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன் கூறும்போது, ‘மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு இங்கிலாந்து அணிக்கான இடைக்கால பயிற்சியாளரை ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் நியமிப்பார். பின்னர் பொருத்தமான பயிற்சி அமைப்புகளை நியமிப்பதற்கான ஆலோசனைகள் நடைபெறும்’ என்று தெரிவித்தார்.