செய்திகள்
சுழற்பந்து வீரர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா - சுழற்பந்து வீரர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு

Published On 2021-11-22 04:51 GMT   |   Update On 2021-11-22 04:51 GMT
ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் புதிய கூட்டணி முதல் 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

கொல்கத்தா:

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

கொல்கத்தாவில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது.

கேப்டன் ரோகித் சர்மா ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 31 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான் கி‌ஷன் 21 பந்தில் 29 ரன்னும் (6 பவுண்டரி), தீபக் சாஹர் 8 பந்தில் 21 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். சாண்ட்னெர் 3 விக்கெட்டும், போல்ட், ஆடம் மிலின், பெர்குசன், சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 17.2 ஓவர்களில் 111 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 73 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் அதிகபட்சமாக 36 பந்தில் 51 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர் ) எடுத்தார். அக்‌ஷர் படேல் 9 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்சல்படேல் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், யசுவேந்திர சாஹல், வெங்கடேஷ் அய்யர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை “ஒயிட் வாஷ்” செய்தது. ஏற்கனவே ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் புதிய கூட்டணி முதல் 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித்சர்மா சுழற்பந்து வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த தொடரில் சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அக்சர் படேல், ஹர்சல் படேல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த சாஹலும் நன்றாக வீசினார்.

வெங்கடேஷ் அய்யருக்கு பந்து வீசும் திறமை இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவரது பந்து வீச்சை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

வெற்றியுடன் தொடரை தொடங்கி இருப்பது முக்கியமானது. எல்லாமே மனநிலையை பொருத்துதான் இருக்கிறது. பனித்துளி விழும் முன்பே பந்து பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி வந்தது. நடுவரிசை பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. ஆனால் கடந்த 2 போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் பெற்று இருக்கிறது. ஹர்சல் படேல் 8-வதாக வந்தாலும் பேட்டிங் செய்கிறார். அவர் அரியானா அணிக்கு தொடக்க வீரராக ஆடியவர். தீபக் சாஹல் பேட்டிங்கை இலங்கை தொடரில் பார்த்தோம். அவரும் சிறப்பாக ஆடினார். சாஹல் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக் கூடியவர்.

இவ்வாறு ரோகித்சர்மா கூறி உள்ளார்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும்போது, “நியூசிலாந்து அணி உலக கோப்பையில் விளையாடிய 3 நாட்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளது. இது உண்மையிலேயே மிக எளிதானது அல்ல. இளம் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்கினோம். அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்” என்றார்.

அடுத்து இரு அணிகள் இடையே இரண்டு டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது. 

Tags:    

Similar News