20 ஓவர் உலக கோப்பை போட்டி: இந்திய அணி வெற்றி தொடருமா? ஸ்காட்லாந்துடன் இன்று மோதல்
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.
இதனால் இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எஞ்சிஉள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். சில ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு இருக்கும்.
நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது. இதன் மூலம் ரன்-ரேட் ஓரளவுக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.
இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் (குரூப்-2) மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் பார்முக்கு திரும்பியுள்ளது பலமாகும். அதேபோல் விராட் கோலி, ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் முகமது ஷமி, அஸ்வின், பும்ரா, ஜடேஜா உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் ரன்-ரேட்டை உயர்த்தும் நோக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற இந்தியா முயற்சிக்கும். ஸ்காட்லாந்து அணி தான் மோதிய மூன்று ஆட்டத்திலும் தோற்றது. அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது.
அந்த அணி பேட்டிங்கில் ஜார்ஜ் முன்சே, மேத்யூ கிராஸ், பெர்ரிங்டன், மைக்கேல் சீசக், ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் ஷெரீப், வீல், மெக்வாட், கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோர் உள்ளனர். இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, ரன்-ரேட் பற்றி எங்கள் மனதில் இருந்தது. அணி கூட்டத்தில் விவாதித்த போது, அரை இறுதிக்கு தகுதி வாய்ப்பை பற்றி பேசினோம். அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசித்தோம் என்றார்.