செய்திகள்
சோயிப் அக்தர் - விராட் கோலி

விராட் கோலிக்கு எதிராக ஒருகுழு: இந்திய அணிக்குள் பிளவு இருக்கிறது - சோயிப் அக்தர் சொல்கிறார்

Published On 2021-11-03 13:11 IST   |   Update On 2021-11-03 13:11:00 IST
இந்திய அணியில் ஒரு குழு விராட் கோலிக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு விராட் கோலிக்கு எதிராகவும் செயல்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் பிளவு இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-

இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். அணிக்குள் இரு பிரிவுகள் செயல்படுகின்றன. ஒரு குழு விராட் கோலிக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு விராட் கோலிக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் என கருதுகிறேன். இது தெளிவாக தெரிகிறது.

எதற்காக இந்த பிளவு ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது. 20 ஓவர் உலக கோப்பையோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததால் இந்த பிளவு இருக்கலாம். அல்லது கடந்த 2 போட்டிகளில் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்பதற்காக இருக்கலாம்.

எது உண்மை என தெரியவில்லை. கோலி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறோம்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாசில் தோற்றவுடனே வீரர்கள் அனைவரும் மனரீதியாக நம்பிக்கை இழந்துவிட்டனர். தோல்வி அடைந்தபின் விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

விமர்சனங்கள் முக்கியமானது. ஏனென்றால் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியினர் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினர். தவறான மன நிலையுடன் இருந்தார்கள்.

டாசில் தோல்வி அடைந்தபோது இந்திய அணி போட்டியில் தோல்வி அடையவில்லை என்பதை நினைக்க மறந்துவிட்டார்கள். இதை மனதில் வைத்து நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட்டு இருந்தால் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் எந்தவித திட்டமிடலும் இந்திய அணியிடம் இல்லை.

இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News