செய்திகள்
ரபெல் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் - மீண்டும் சாதிப்பாரா நடால்?

Published On 2020-09-26 19:55 GMT   |   Update On 2020-09-26 19:55 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் நடால் 13-வது முறையாக பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாரீஸ்:

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது. மே மாதத்தில் நடக்க இருந்த இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்க உள்ளது. தினமும் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை ஸ்டேடியத்தில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

‘களிமண்’ தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) சக்ரவர்த்தியாக திகழ்கிறார். இங்கு 12 முறை பட்டம் வென்று சரித்திரம் படைத்திருக்கும் நடால் மறுபடியும் வெற்றிக்கொடி நாட்டும் முனைப்புடன் உள்ளார். இந்த முறையும் மகுடம் சூடினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (20 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் வழக்கமாக வெயிலுடன் வறண்ட வேகமான ஆடுகளத்தில் விளையாடி பழக்கப்பட்ட நடால், தற்போதைய குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, புதிய வகை பந்து பயன்படுத்தப்பட இருப்பது போன்றவை எல்லாம் முன்பு எப்போதும் இல்லாததை விட கடும் சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் தனது முதல் சுற்றில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) சந்திக்கிறார். காயம் காரணமாக பெடரர் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

நடாலுக்கு, ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), சமீபத்தில் அமெரிக்க ஓபனை கைப்பற்றிய டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் டேனில் மெட்விடேவ், பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஜோகோவிச் முதல் சுற்றில் தரவரிசையில் 80-வது இடம் வகிக்கும் மிகைல் மிர்ரை (சுவீடன்) எதிர்கொள்கிறார். அமெரிக்க ஓபனில் பந்தை நடுவர் மீது அடித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜோகோவிச், அதற்கு பிரெஞ்ச் ஓபனில் பரிகாரம் தேட முயற்சிப்பார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக நடந்த இத்தாலி ஓபனில் அவர் கோப்பையை சொந்தமாக்கியதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்.

கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரான டொமினிக் திம்முக்கு முதல் சுற்று கொஞ்சம் கடினமாக அமைந்துள்ளது. அவர் முன்னணி வீரர் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோதுகிறார்.

பெண்கள் பிரிவில் காயம் மற்றும் கொரோனா பீதியால் அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) ஆகியோர் விலகியுள்ளனர். இதனால் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), பிளிஸ்கோவா, கிவிடோவா (இருவரும் செக்குடியரசு), ஸ்விடோலினா (உக்ரைன்), அஸரென்கா (பெலாரஸ்), முகுருஜா (ஸ்பெயின்), சோபியா கெனின் (அமெரிக்கா) உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடையே பட்டம் வெல்வதில் பலத்த போட்டி நிலவுகிறது. ஹாலெப் முதல் சுற்றில் 78-ம் நிலை வீராங்கனை சோரிப்ஸ் டோர்மோவுடன் (ஸ்பெனின்) களம் காணுகிறார்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.325 கோடியாகும். இதில் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.14 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ஏறக்குறைய ரூ.7 கோடியும் வழங்கப்படும். முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.52 லட்சம் கிடைக்கும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Tags:    

Similar News