செய்திகள்
கொல்கத்தா வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 142/4 - கொல்கத்தா அசத்தல் பந்து வீச்சு

Published On 2020-09-26 16:05 GMT   |   Update On 2020-09-26 16:05 GMT
கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
அபுதாபி:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொண்டுள்ளது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஷ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய பிரிஷ்டோ 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே கேப்டன் வார்னருடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த ஐதராபத் கேப்டன் வார்னர் சக்ரவர்த்தி வீசிய பந்தில் அவரிடமே சுலபமான கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் சற்று அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே 38 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த முகமது நபியுடன் ஜோடி சேர்ந்த விர்திமன் சஹா ரன் எடுக்க முடியாமல் மிகவும் திணறினார். 31 பந்துகளை சந்தித்த விர்திமன் சஹா 1 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 30 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதியாக, கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ஆண்டே ரசல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

143 ரன்கள் என்ற சற்று எளிய இலக்கை எட்டி ஐபிஎல் 2020 தொடரில் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்வதில் தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

Similar News