செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்- 47 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது நியூசிலாந்து

Published On 2018-11-08 06:10 GMT   |   Update On 2018-11-08 06:10 GMT
அபுதாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. #PAKvNZ
அபுதாபி:

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்கள் விளாசினார். லாதம் 68 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக மூன்றாவது ஓவரில் பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், ரன் குவிக்க திணறியது. கடுமையாக போராடிய சர்பிராஸ் அகமது 64 ரன்களும், இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 47.2 ஓவர்களில் 219 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. #PAKvNZ    
Tags:    

Similar News