செய்திகள்

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2018-08-20 16:53 GMT   |   Update On 2018-08-20 16:53 GMT
டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 521 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

அடுத்து விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி 191 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 197 பந்தில் 103 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் சேர்த்திருந்தது. 449 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.



கோலி ஆட்டமிழந்த பிறகு அதிரடியாக ரன்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பந்தை இந்தியா களம் இறக்கியது. அவர் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 

ரஹானே 29 ரன்களும், அடுத்து களமிறங்கிய சமி 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 110 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 352 ரன்களை எட்டிய போது, இந்திய அணி டிக்ளேர் செய்தது. பாண்டியா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதன் மூலம் இந்திய அணி 520 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொண்டது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 
Tags:    

Similar News