செய்திகள்

முத்தரப்பு டி20 தொடர் - அயர்லாந்துக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது நெதர்லாந்து

Published On 2018-06-12 18:44 GMT   |   Update On 2018-06-12 18:44 GMT
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

ரோட்டர்டேம்:

நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 15 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து சாகிப் சுல்பிகர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



அதன்பின் பஸ் டி லீடே, பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சீலர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். லீடே 33 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பேரி மெக்கர்த்தி, சிமி சிங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

அதைத்தொடர்ந்து 145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டூவர்ட் தாம்ப்சன், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களமிறங்கினர். தாம்ப்சன் 15 ரன்களிலும், ஸ்டிர்லிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்தவர்கள் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



இதனால் அயர்லாந்து அணி 63 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. இறுதியில் சிமி சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சிமி சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சீலர் 3 விக்கெட்களும், ஷேன் ஸ்னாடர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
Tags:    

Similar News