செய்திகள்

மகளிர் ஆசிய கோப்பை - இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

Published On 2018-06-06 14:55 IST   |   Update On 2018-06-06 15:41:00 IST
மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி, இந்திய அணியை 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #WomenAsiaCup #WAC2018 #BANWvINDW

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, வங்காளதேச அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மிதாலி ராஜ் 15 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் பூஜா வஸ்த்ரகர் - ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக விளையாடினர். பூஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து தீப்தி சர்மா களமிறங்கினார். சிறப்பாக விளையாடிவந்த ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன்னிலும், தீப்தி சர்மா 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் ருமானா அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். 



இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷமிமா சுல்தனா, ஆயஷா ரஹ்மான் ஆகியோர் களமிறங்கினர். ஆயஷா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பர்கானா ஹக் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஷமிமா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் வந்த நிகார் சுல்தானா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பர்கானா உடன் ருமானா அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. ஒரு கட்டத்தில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஜூலன் கோஸ்வாமி 18-வது ஓவரை வீசி 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் வங்காளதேச அணிக்கு 12 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

சிறப்பாக விளையாடி வந்த பர்கானா 44 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் வங்காளதேச அணிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் வங்காளதேச அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்கானா 52 ரன்களுடனும், ருமானா 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி நாளை தனது 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. #WAC2018 #BANWvINDW

Tags:    

Similar News