ஐ.பி.எல்.(IPL)

சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு 219 ரன் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Published On 2018-05-17 21:58 IST   |   Update On 2018-05-17 21:58:00 IST
டி வில்லியர்ஸ், மொயீன் அலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #RCBvSRH
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விராட் கொலி அவுட்டாகும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4.5 ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ரன்ரேட் சராசரியாக 10-ஐ தொட்டது. 12-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி 13-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 25 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் 13-வது ஓவரில் 18 ரன்களும், 14-வது ஓவரில் 14 ரன்களும் குவித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது.

இன்னும் 6 ஓவர் இருந்ததால் ஸ்கோர் 225 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவர் ராயல் சேலஞ்சர்ஸ்க்கு பேரிடியாக அமைந்தது. 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.



டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். இருவரும் ஆட்டமிழக்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
Tags:    

Similar News