செய்திகள்

பெடரர் விளையாடிய விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த சச்சின்

Published On 2017-07-15 17:34 IST   |   Update On 2017-07-15 17:34:00 IST
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் அரையிறுதியின் ரோஜர் பெடரர் ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) 100 சதங்களை பதிவு செய்த ஒரே வீரர் என்ற பெருமையும், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும் அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டை தவிர மற்ற ஏதும் தெரியாதவர் என்று அவரது ரசிகர்கள் எண்ணியிருந்த நிலையில், சச்சின் தெண்டுல்கர் டென்னிஸின் தீவிர ரசிகராக இருந்தார்.

குறிப்பாக லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை நேரில் சென்று பார்க்க விரும்புவார். இவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகர்.

நேற்று விம்பிள்டன் அரையிறுதி ஒன்றில் பெடரர், தாமஸ் பெர்டிச்சை சந்தித்தார். தற்போது லண்டனில் இருக்கும் சச்சின் இந்த போட்டியை நேரில் சென்று கண்டுகளித்தார். இந்த போட்டியில் பெடரர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



ரோஜர் பெடரரின் போட்டியை கண்டுகளித்த சச்சின் கூறுகையில் ‘‘எப்போதும் இங்கே வருவது எனக்கு சிறப்பான ஒன்று. நான் டென்னிஸ் விளையாட்டின் தீவிர ரசிகன். விம்பிள்டன் தொடரைவிட சிறந்தது ஒன்றுமில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ரோஜர் பெடரரின் ஆட்டத்தை கண்டுகளித்து வருகிறேன். ஆகவே, இங்கே வந்து ரோஜர் பெடரருக்கு மீண்டும் ஆதரவு அளிக்கிறேன்.



விளையாட்டு வீரர்கள் அல்லது டென்னிஸ் வீரர்கள் யாராக இருந்தாலும் உலக ரசிகர்கள் பாராட்டுவார்கள். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். உலகளவில் பல்வேறு சாதனைகளை பெற்றுள்ள பெடரர், தன்னடக்கம் உள்ளவர். இப்படி இருப்பது சிறப்பானது’’ என்றார்.

Similar News