செய்திகள்

12 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த வெற்றி: சாக்சி மாலிக் மகிழ்ச்சி

Published On 2016-08-18 11:20 IST   |   Update On 2016-08-18 11:20:00 IST
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் 12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம் என கூறியுள்ளார்.
ரியோடி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பெற்றுக் கொடுத்தார். பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அரியானவை சேர்ந்த அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது குறித்து சாக்சி மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எனது கனவு நனவானது. இந்த சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணமாகும்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனையாக நானாக இருப்பேன் என்பதை நினைத்து பார்க்கவில்லை. மற்ற மல்யுத்த வீரர்களும் பதக்கங்களை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம். இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததை நினைத்து நான் மிகவும் சந்தோ‌ஷம் அடைகிறேன். என் மீது அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒலிம்பிக் வெண்கல பதக்கத்தை எனது குடும்பத்தினர் மற்றும் எனது பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாக்சி மாலிக் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றதால் அவரது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தனது மகள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதாக அவரது தாயார் சகேஷ் கூறியுள்ளார்.

Similar News