செய்திகள்

ரியோ ஒலிம்பிக்கில் சைக்கிள் பந்தயத்தில் தங்கம் வென்ற காதல் ஜோடி

Published On 2016-08-18 08:06 IST   |   Update On 2016-08-18 08:06:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னி இவரது காதலி லாரா டிரோட்டும் சைக்கிள் போட்டியில் தங்கம் வென்றனர். ‘தங்க ஜோடி’யாக வலம் வந்த கென்னி-லாரா டிரோட் மைதானத்தில் முத்தமழை பொழிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
ரியோ டி ஜெனீரோ :

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டியில், உள்ளரங்க ஓடுபாதையில் நடக்கக்கூடிய கெய்ரன் டிராக் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். நடப்பு ஒலிம்பிக்கில் அவரது 3-வது தங்கமாகும். மொத்தத்தில் அவரது ஒலிம்பிக் தங்கத்தின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக தங்கம் வென்றவரான முன்னாள் சைக்கிள் பந்தய வீரர் சர் கிறிஸ் ஹோயின் சாதனையை 28 வயதான ஜாசன் கென்னி சமன் செய்தார்.

இவரது காதலியும், வருங்கால மனைவியுமான 24 வயதான லாரா டிரோட்டும் சைக்கிள் பந்தய வீராங்கனை தான். இதே நாளில் நடந்த ஒம்னியம் பிரிவில் சாம்பியன் மகுடத்தை தக்க வைத்து பிரமாதப்படுத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் தனது தங்கப்பதக்கத்தை 4ஆக உயர்த்திய லாரா டிரோட், அதிக தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

‘தங்க ஜோடி’யாக வலம் வந்த கென்னி-லாரா டிரோட் மைதானத்தில் முத்தமழை பொழிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் அடுத்த மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக்கில் சைக்கிள் பந்தயத்தில் மட்டும் இங்கிலாந்து 6 தங்கம் உள்பட 12 பதக்கங்களை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News