ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- இருண்ட காலம் விலகியது!
- ‘அவர்கள்’ படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது.
- ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.
ரஜினியை பல தடவை கமல் பாராட்டி பேசி உள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டி.....
'கமலுக்கும் ரஜினிக்கும் ஆகாது. ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கிறார்கள் என்று எங்களது எதிரிகள் சிலர், எங்களுக்குள் கோள் மூட்டி விடப்பார்த்தனர். ஆனால் எங்களது நட்பு சினிமா அந்தஸ்தை மீறி நிற்பதாகும். அந்த உயரத்திற்கு வந்து எங்களை, எங்கள் நட்பை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
'அபூர்வ ராகங்கள்' தொடங்கி எங்கள் நட்பு வளர்ந்தது. 'அவர்கள்' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், "தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே, கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன?" என்று கேட்டேன்.
ரஜினி அமைதியாக என்னிடம், "கமல், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு 'ஸ்டைல்' நடிப்புத்தான் சரி" என்றார். இப்படி அவரது பதில் எதுவும் நேரிடையாகத்தான் வரும். 'சுற்றி வளைத்து' பேசுவது என்பதே அவரிடம் கிடையாது.
'அவர்கள்' படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் 'அவர்கள்' நடிப்பைச் சுட்டிக் காட்டி மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.
'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். தான் சுற்றுவது போதாதென்று என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாள் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்கு வேன். 'அட, சும்மா வாங்க, சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்' என்று அழைத்து செல்வார்.
சுற்றிவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்ப நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் இரவில் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை.
அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விடுவேன். அவர் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் வருவார். மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் படப் பிடிப்புக்குத் தயாராக வேண்டும் என்ற கவலையே இருக்காது.
மறுநாள் காலையில் முந்தய இரவு விழித்திருந்த அசதியும் ரஜினியிடம் தெரியாது. பாலச்சந்தர் சார் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 5 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாரென்றால் காட்சியைத் தயார் செய்ய அரை மணி நேரமாகும். இந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவதில்லை.
சிங்கப்பூரிலுள்ள பூங்கா, சாலைப் பகுதிகளில் சிமெண்ட் சாய்மானங்கள் இருக்கும். நான் ஒரு பக்கம் ரஜினி வேறொரு பக்கம் இருக்க சாத்தியப்படாது. டைரக்டர் அழைக்கும்போது எழுந்து ஓட வேண்டுமே.
அதற்காக ஓரே இடத்தில் இருவரும் ஒருவரது தோள்மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம். ஓரே காரில் பயணம் செய்யும்போதும் விமான நிலையத்திலும்.... என்று கிடைத்த இடங்களில் இப்படித் தூங்கித்தான் ஓய்வெடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை.
நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது தயாரிப்பாளர்கள் எங்கள் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவதை எண்ணிப் பார்த்தோம்.
தனித்தனியாக படம் செய்தால் அதைவிட அதிகமாகவே சம்பளம் பெற முடியும் என்று உணர்ந்தோம். அதனால் சேர்ந்து நடிப்பதற்கு தற்காலிகமாக முடிவு கட்டுவது என்று சோபா ஒன்றில் அமர்ந்து பேசி தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் சரியாகவே இருந்தது.
இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.
எங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. வலிமை இருக்கிறது. எங்கள் சினிமா அந்தஸ்து உச்சத்தில் இருக்கும்போது இருவரும் நிச்சயம் இணைந்து நடிப்போம்.
ஒரு விருந்தில் நானும் ரஜினியும் கலந்து கொண்டோம். அதில் எங்களுக்குள் கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டூடியோவில் இருந்தேன். என்னைப் பார்க்க ரஜினி வந்தார். என் கையை அழுத்தமாகப் பிடித்தார். சாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது. அவரது பெருந்தன்மை என்னைச் சுட்டது.
சினிமாவைப் பொறுத்தவரை நாங்கள் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம் நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அவர் அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக வெடித்து சிதறுவார். அதைப் பார்த்து அதைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் முயலுவேன். எங்கள் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை.
ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் நாங்கள் பின் வாங்கியதில்லை. அது மட்டுமின்றி எங்கள் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்க பயந்ததில்லை. அந்த தைரியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மனப்பாங்கு வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காண முடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.
ஒரு சமயம் ரஜினியிடம் உள்ள பழக்கம் ஒன்றைச் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளும்படி சொன்னேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு "பொறுத்துப் பாருங்கள்" என்றவர் சில நாட்களிலேயே அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதுதான் ரஜினி.
இவ்வாறு கமல் கூறினார்.
ரஜினிகாந்த் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டிருந்த காலக் கட்டத்தை 'இருண்ட காலம்' என்று டைரக்டர் கே.பாலச்சந்தர் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்தின் திரை உலகப் பிரம்மாவான டைரக்டர் பாலச்சந்தர், ரஜினிக்கு அந்த கறுப்பு நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றியும், நரம்புத் தளர்ச்சி பற்றியும் அப்போது கூறியவை வருமாறு:-
நினைத்தாலே இனிக்கும் படத்தின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பதாக என் உதவி டைரக்டர் கண்மணிசுப்பு, எனக்கு போன் செய்தார். நான் உடனே அங்கு சென்று ரஜினியை தனியே அழைத்து, "ஏன் டப்பிங் பேச மறுக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
'கால் முடமானவனை ஓடச்சொல்லி வேடிக்கை பார்ப்பது ஆறறிவு படைத்த மனிதன் செய்கிற வேலையா? உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு மனிதனிடம் வேலை வாங்குவது நியாயமா?' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் ரஜினி என்னிடம் பேச மாட்டார். மனநிலை சரியில்லாமல்தான், இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன். உடனே டப்பிங்கை கேன்சல் செய்துவிட்டு, டாக்டர் ஆர்.எஸ். ராஜகோபால் அவர்களிடம் ரஜினியை அழைத்துச் சென்றேன்.
இடைவிடாத உழைப்பால் ரஜினிக்கு அதிக அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் கூறினார். ஓய்வெடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார். வெலிங்டன் மருத்துவமனையில் சேர்த்து கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னதால், ரஜினியை அங்கு உடனே அட்மிட் செய்தேன். தினம் காலையிலும் மாலையிலும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது.
ஐ.வி.சசி அவர்கள் கமல்ஹாசனையும், ரஜினியையும் வைத்து 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ஷாட் ரெடியானதும் ரஜினியை உடை மாற்றிக்கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். ரஜினி மறுத்துவிட்டார். எல்லோரும் போய் கேட்டிருக்கிறார்கள். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கமல்ஹாசனும், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் ஐ.வி. சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு போன் செய்தார். நானும் உடனே போனேன். ரஜினியை மேக்கப் அறையில் சந்தித்தேன். 'ஏன் ரஜினி. டிரஸ் போட்டுக்க வேண்டாமா? ஷாட் ரெடியா இருக்குல்ல' என்று நான் சற்று அதட்டிச் சொல்வது போல் சொன்னதும், டிரஸ் போட ஆரம்பித்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் நடிகை ஸ்ரீபிரியா என் வீட்டிற்கு வந்தார். 'சார், உங்கள் ஒருவரால்தான் ரஜினிகாந்தைச் சரியான பாதைக்குத் திருப்ப முடியும். ஒரு நல்ல நடிகரை தமிழ்த் திரைக்கு அளித்தீர்கள். ரஜினி காந்தின் இழப்பைத் தடுக்க நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும்" என்று மனம் விட்டுப் பேசினார்.
'கதை முடிந்தது' என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்த போது, அது தொடர் கதை ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளமும் இருக்கிறதே என்று அறிந்ததும் என் கண்களில் நீர் திரையிட்டது.
மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்து, விஜயா நர்சிங் ஹோமில் ரஜினியை சேர்த்தோம். டாக்டர் செரியனின் கண்காணிப்பில் 15 நாள் பரிபூரணமாக ஓய்வெடுத்துக் கொண்டதால் நலம் பெற்றார், ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் போன்ற கலைஞர்களை 20, 25 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காண முடியும். கைநழுவ இருந்த ஒரு கலைஞனை, திரைப்பட உலகம் திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.'
இவ்வாறு பாலச்சந்தர் கூறினார்.
இதைப் பார்த்த படத் தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜிக்கு ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர் ரஜினியை சந்தித்துப் பேசினார். நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பெயரில் படமாக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டதும் ரஜினி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பாலாஜி சொன்ன படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா என்பதை நாளைப் பார்க்கலாம்.