ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பாரதிராஜா-ரஜினி சந்திப்பு
- அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது.
- பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர்.
1979-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஜினி நன்கு குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவரை மையப்படுத்தி அனைத்துப் பத்திரிகைகளும் போட்டி போட்டு செய்திகள் வெளியிட்டன. சினிமா இதழ்களில் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அவை அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது. குறிப்பாக ரஜினி ஒவ்வொரு பேட்டியிலும் தன்னைப் பற்றி யதார்த்தமாக பேசியதை தமிழக ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். போலியாக நடிக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்கிறார் என்று புகழ்ந்தனர்.
நாளடைவில் இதுவே ரஜினிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது. இதனால் சினிமா இதழ்களில் ரஜினி பற்றிய தகவல்கள் தவறாமல் இடம் பிடித்தன. ஒரு பிரபல சினிமா இதழ் டைரக்டர் பாரதிராஜாவையும், ரஜினியையும் சந்தித்து உரையாட வைத்து சிறப்பு இதழே வெளியிட்டது.
பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர். அவர்களது உரையாடல் வருமாறு:-
பாரதிராஜா: வில்லனை மக்கள் ரசித்தது உங்களை பார்த்துதான். ஆனால் கடந்த சில மாதங்களாக உங்களது செயல்பாடுகளால் பலவிதமாக பேசப்பட்டது. என்றாலும் மக்கள் மத்தியில் அது சின்ன சலனத்தைக் கூட ஏற்படுத்த–வில்லை. அதற்கு முக்கிய காரணம் உங்களிடம் அது மாதிரியான தவறான போக்கு இல்லை என்பதை தமிழக மக்கள் முழுவதுமாக உணர்ந்திருந்ததுதான்.
இன்னும் சொல்வதென்றால் உங்களுடைய புகழ் இப்போது மேலும் அதிகமாகி விட்டது. அது தவிர பட உலகில் இருக்கிறவர்களுக்கும் உங்களிடம் ஒரு மென்மையான போக்கு இருந்தது. அதுதான் உங்களை காப்பாற்றியது என்று நினைக்கிறேன்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ரஜினி: ஆமாம். உண்மைதான். அந்த சமயத்தில் என்கூட நடிச்சவங்க மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என் சூழ்நிலை தெரியாமல் நான் என்னையும் அறியாமல் என்னென்னவோ செய்து இருக்கிறேன். சில பேர் முகத்தில் துப்பி இருக்கிறேன். அதையெல்லாம் அவர்கள் பொறுத்துக் கொண்டது நான் வணங்கிய தெய்வங்களின் அனுக்கிரகம் என்றுதான் சொல்வேன். நான் செய்த தவறுகளை நினைத்துப் பார்த்தால் எனக்கு என்னவோ போல் இருக்கிறது.
எனக்கு என்னையும் மீறி என்னவோ நடந்து விட்டது. எனக்கு சில பேர் சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். எப்படியோ மீண்டு விட்டேன்.
பாரதிராஜா: நீங்கள் ஒரு தடவை ஜப்பானோ, சிங்கப்பூரோ போய் விட்டு வந்தீங்களாமே... அதற்குப்பிறகுதான்....
ரஜினி: ஜப்பான் இல்லை. அய்யப்ப சாமிக்கு மாலை போட்டு சபரிமலைக்கு போய் விட்டு வந்த பிறகு பாம்பே போனேன். அங்கேயே என்னிடம் சில மாறுதல்கள் இருந்தன. அதை நான் அப்போதே உணர ஆரம்பித்தேன். சென்னைக்கு திரும்பியதும் அந்த பாதிப்பு அதிகமானது.
அப்போதெல்லாம் ஒரு மணி வரைக்கும் குடிப்பேன். அப்புறம் தூக்கம் வராது. ஸ்கூட்டரில் மெரினா கடற்கரை... அங்க இங்கன்னு சுத்துவேன். அதன் பிறகு அதிகாலை 3 மணி, 4 மணிக்கு வீட்டுக்கு வருவேன். மீண்டும் மது குடிப்பேன். 5 மணிக்கு ஒரு மாதிரி இருக்கும். தூங்கப் போவேன்.
காலை 6 மணிக்கு ஷூட்டிங்கிற்கு கார் வந்து விடும். உடனே குளிச்சிட்டு புறப்பட்டு விடுவேன். தூக்கமே கிடையாது. அதுக்கு மேல ஜரிதா பீடா வேற போடுவேன். இந்த நிலையில் சிங்கப்பூருக்கு நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்கு சென்றேன். அங்கே 6 மாசம் இருந்ததில் எல்லாம் ஓவரா போய் விட்டது.
அதன் பிறகு 40 நாள் விரதம். அது முடிந்ததும் திரும்பியும் வெறி வந்த மாதிரி சாப்பிட ஆரம்பித்தேன். அது மட்டுமில்லே... இரவு பகலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். பிப்ரவரியில் என் உடல்நிலை கெட ஆரம்பித்தது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் ரொம்ப மோசமாகி விட்டது.
நான் மதுரையில் ஐதராபாத்தில் எல்லாம் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாது. மதுரையில் சிவாஜி சாருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு மேடைக்கு எப்படி போனேன் ... என்ன பேசினேன்... ஒன்றும் ஞாபகம் இல்லை.
நான் பெல்ட்டால் எல்லாம் அடித்தேன் என்று சொன்னார்கள். அதுமாதிரி சோழா ஓட்டலில் கலாட்டா, சபையர் தியேட்டர்லே கலாட்டா செய்ததாக சொன்னார்கள். அப்போதெல்லாம் யாரையாவது அடித்து விட்டால் அதுக்காக வருத்தப்பட மாட்டேன். 'அடிச்சிட்டேன்'னு பெருமைபட்டுக் கொள்வேன்.
பாரதிராஜா: உங்க இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்து இருந்தால் காணாமல் போய் இருப்பார். அவர்களுடைய மார்க்கெட் சிதறி போய் இருக்கும். பொதுவாக தமிழக ரசிகர்கள் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நன்கு உற்றுப்பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
ரஜினி: ஆமாம் சார்... இதை நான் அப்போதே நினைத்து பார்ப்பது உண்டு. எனது செயல்பாடுகளால் என்னுடைய சினிமா வாய்ப்புகள் பாதிக்கும் என்றே நினைத்தேன். ஆனால் தமிழக மக்கள் என்னை புரிந்துக் கொண்டார்கள். என்னை அவர்கள் நம்பினார்கள்.
என்றாலும் கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டு முழுக்க முழுக்க வில்லன் மாதிரி இருக்கிற படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ராமரை விட்டு விட்டு ராவணன் கதையை ஆரம்பிக்க வேண்டியதுதானே!
பாரதிராஜா: ஆனால் எப்போதும் பஞ்சு அருணாசலம் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். பலர் உங்களைப் பற்றி தப்பாக பேசிக்கிட்டு இருந்த சமயங்களில் நான் பஞ்சுவை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவர் உங்கள் பக்கம்தான் பேசுவார்.
ஒரு தடவை அவர் என்னிடம் 'நான் ரஜினியோட ரொம்ப பழகி இருக்கிறேன். அவரது குணம் இது அல்ல' என்றார். உங்களுக்கும் பஞ்சுவுக்கும் ஒரு நல்ல நட்புணர்வு இருக்கிறது.
பஞ்சுவினுடைய புவனா ஒரு கேள்விக்குறி-யில் உங்களை திரையுலகில் புதிய பாதையில் அவர் மாற்றி விட்டு விட்டார். அதன் பிறகு காயத்ரி, பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை எல்லாமே பெரிய சக்சஸ் என்பது மட்டுமில்லை. உங்களுக்கும் பெரிய பெயரும் வாங்கிக் கொடுத்து இருக்கிறது.
எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு வில்லனை மக்கள் ரசித்தது உங்கள் ரூபத்தில்தான். 16 வயதினிலே படத்துக்காக நாம் சேர்ந்து இருந்த போது எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்க வேலையைத் தவிர வேறு எதிலும் நீங்கள் தலையிட்டது இல்லை. அதன் பிறகு நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
ஒரு தடவை ஒரு விருந்தில் நமக்குள் லேசான உரசல் ஏற்பட்டது. அது ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் அதிக மது குடித்து இருந்ததால் அப்படி ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ரஜினி: அன்று விருந்தில் நான் இருந்த சூழ்நிலை அப்படி. அன்று சிலரால் நான் ஏதேதோ பேசி விட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும். தப்பு என் மேல்தான். இதுபற்றி பேச உங்களுக்கு நான் 3, 4 தடவை போனில் தொடர்பு கொண்டேன். நீங்கள் கிடைக்கவில்லை.
பாரதிராஜா: அந்த விஷயத்தை அன்றே நான் மறந்து விட்டேன். அதான் என் குணம். நான் முதல் முறையாக எங்கே உங்களை சந்தித்தேன் என்று தெரியுமா?
ரஜினி: 'அவர்கள்' பட ஷூட்டிங்கின்போது ஒரு மாடியில் தானே...
பாரதிராஜா: இல்லை. அதுக்கு முன்னாடி சிவசுப்ரமணியம் பூஜையில் உங்களைப் பார்த்தேன். பூஜை நடந்துகிட்டிருக்கு. ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தீங்க. படத்தில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது.
ரஜினி: ஆமாம். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறேன்.
பாரதிராஜா: '16 வயதினிலே' படம் முடிந்து ஒரு நாள் நாம் பேசிக்கொண்டிருந்த போது உங்க திறமையை நீங்க காட்டணும்னு நீங்களே சொல்லி இருக்கீங்க. நடிகர்கள் நடிச்சி 5 படங்கள் வந்து 3 படம் ஓடினால் கூடப் போதும். ஆனால் எங்க நிலை அப்படி இல்லை. படம் ஓடாவிட்டால் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் ஒரே நேரத்துல 4, 5 படம் பண்ண முடியவில்லை.
ரஜினி: 'இமேஜ்' வந்தாலே பிரச்சினைதான். இமேஜ் வரவேண்டும் என்று கஷ்டப்படுகிறோம். வந்த பிறகு அதைக் காப்பாற்றி கொள்ள போராடுகிறோம். சினிமாவை நாம் தொழிலாக நினைத்தால் ரொம்ப சிரமப்படுவோம். சினிமாவை அனுப வித்து வாழ்க்கையை கொண்டு போனால் போதும். அதற்கு பிறகு நாம் சாதித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் உரையாடல் நடந்தது.
டைரக்டர் பாலச்சந்தர், கமல் இருவரும் ரஜினி முழுமையாக குணம் அடைந்து மீண்டதை வரவேற்று பேட்டியளித்தனர். அவர்கள் இருவரும் என்ன சொன்னார்கள் என்பதை நாளைக் காணலாம்.