ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினிக்கு எம்.ஜி.ஆர். சொன்ன அறிவுரை
- சிவக்குமாரும், ஜெய்சங்கரும் மற்ற நடிகர்களை விட ரஜினியிடம் சற்று அதிகமாக பழகி இருந்தனர்.
- படத்தில் ரஜினி காட்டுக்குள் சென்று மிருகங்களை பிடித்து விற்பனை செய்யும் வேடத்தில் நடித்து இருந்தார்.
''கண்டக்டர் வேலையில் நான் நிம்மதியாக இருந்தேன். அந்த வேலைதான் எனக்கு எல்லாவிதமான சுகத்தையும் தந்தது. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு அந்த சுகங்கள் எல்லாவற்றையும் நான் இழந்து விட்டேன். ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். சினிமாவை விட்டுவிட்டு மீண்டும் கண்டக்டர் வேலைக்கு போக முடியாது. அதை தினமும் நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது எனக்கு தற்கொலை செய்து ெகாள்ளலாமா? என்று கூட ஒரு தடவை தோன்றியது. ஆனால் என்னை நம்பி திரை உலகில் நிறைய குடும்பங்கள் இருப்பதை பலரும் என்னிடம் சொல்வார்கள். அந்த சமயங்களில் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும். நம்மிடம் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று யோசிப்பேன்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு என்னை அழைத்து வந்த சக்தி எது? என்று யோசித்துப் பார்ப்பேன். அப்போது எனக்கு ஒன்று புரிய ஆரம்பித்தது. எனக்குப் பின்னால் இருந்து ஏதோ ஒரு சக்தி என்னை இயக்கி ஆட்டி வைத்துக் கொண்டே இருப்பதை முழுமையாக நான் உணர்ந்தேன். என்னை ஆட்டி வைத்த அந்த சக்தி எது? என்று எனக்கு தெரியவில்லை...''
1978-ம் ஆண்டு இறுதியிலும் 1979-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் இந்த வார்த்தைகளை வசனம் போல உடைந்த ரிக்கார்டு போல ரஜினி திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். ரஜினியின் இந்த பேச்சை 99 சதவீதம் பேர் உளறல் என்றே நினைத்தனர். மீதமுள்ள அந்த ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே ரஜினியின் வார்த்தைகளில் உள்ள அர்த்தம் புரிந்தது.
ரஜினியின் குலதெய்வமும், இஷ்ட தெய்வங்களும், சித்தப் புருஷர்களும், மகான்களும்தான் ரஜினி வாழ்க்கையை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் செதுக்கி, செதுக்கி திரை உலகுக்குள் கொண்டு வந்து தள்ளியுள்ளனர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
ஆனால் தொடக்கத்தில் ரஜினி இதை உணரவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் குடிப்பழக்கத்தில் மூழ்கி இருந்ததுதான். மற்ற போதை பழக்கங்களும் அவரை ஆக்கிரமித்த போது தமிழ் திரை உலகின் முக்கிய நடிகர்கள் அனைவருமே கவலைப்பட்டனர்.
நம்பியார், மேஜர் சுந்தரராஜன், சிவக்குமார், பாலாஜி, முத்துராமன், நாகேஷ், வி.கே.ராமசாமி என பலரும் ரஜினிக்கு அறிவுரை சொன்னார்கள். சிவக்குமாரும், ஜெய்சங்கரும் மற்ற நடிகர்களை விட ரஜினியிடம் சற்று அதிகமாக பழகி இருந்தனர். ஜெய்சங்கர், ரஜினியுடன் பல மாதங்கள் நகமும், சதையுமாக இருந்தார்.
அப்படி இருந்தும் சிவக்குமார், ஜெய்சங்கரின் அறிவுரைகளை ரஜினி கண்டுகொள்ளவில்லை. டைரக்டர் பாலச்சந்தரிடம் 'குரு' என்ற முறையில் ரஜினிக்கு பயமும், பக்தியும் இருந்தது. பாலச்சந்தர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படுவார்.
1979-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதெல்லாம் காற்றில் பறந்து விட்டது. யார் சொல்லியும், எந்த அறிவுரைகளையும் ரஜினி ஏற்கவில்லை. தினமும் குடிபோதையில் மிதந்தார். குறிப்பாக 'அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'தர்மயுத்தம்' ஆகிய 2 படங்களிலும் இரவு -பகலாக மாறி, மாறி நடித்து அவருக்குள் மனநல பாதிப்பு அதிகரித்தது.
'அலாவுதீனும் அற்புதவிளக்கும்' படப்பிடிப்புகளில் ரஜினிக்கு மனநல பாதிப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் கமல் மேக்கப் போட்டு விட்டு, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு வரை இதே நிலை நீடித்தது. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இதைத் தொடர்ந்து 'தர்மயுத்தம்' படத்தில் ரஜினி தீவிர கவனம் செலுத்தினார். இதில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. டைரக்டர் ஆர்.சி.சக்தி இயக்கிய இந்த படத்தில் தங்கை மீது அதிக பாசம் உள்ள தொழில் அதிபர் வேடத்தில் ரஜினி நடித்தார். இந்தப் படத்தில் ரஜினிக்காக மலேசியா வாசுதேவன் பாடிய, 'ஒரு தங்க ரதத்தில்' என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.
'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படம் சரியாக ஓடாததால் ரஜினி நடித்த 'தர்மயுத்தம்' படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்்தது. மனநலம் பாதிக்கப்பட்ட ரஜினியின் எதிர்காலத்தை இந்த படம்தான் தீர்மானிக்கப் போகிறது என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தர்மயுத்தம் கதைப்படி, ரஜினி பகலில் அமைதியாகவும், பவுர்ணமி நாட்களில் இரவில் சைக்கோ போல மாறி உக்கிரமாக நடந்து கொள்வது போலவும் நடிக்க வேண்டியது இருந்தது. அந்த சமயத்தில் ரஜினி உண்மையிலேயே அத்தகைய நிலையில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது 'தர்மயுத்தம்' படத்தில் அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலித்தது.
'தர்மயுத்தம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரஜினியை மரத்தில் கட்டிப் போட்டு விட்டு, மரத்தைச் சுற்றி தீ வைத்து விடுவார்கள். அவரை கொல்வதற்காக வில்லனின் ஆட்கள் அப்படி செய்வார்கள். அந்த இறுதிக்கட்ட காட்சியை அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்க முடிவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் திடீரென ரஜினி அந்த காட்சியில் நடிக்க மறுத்து விட்டார். 'ஏன்?' என்று கேட்டதற்கு திரை உலகில் இருக்கும் சில மர்ம எதிரிகள், பணம் கொடுத்து உண்மையிலேயே மரத்தில் தன்னைக் கட்டி வைத்து எரித்து கொன்று விடக் கூடும் என்று ரஜினி பயந்தபடி கூறினார். படக்குழுவினர் எவ்வளவோ சமரசம் செய்தும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்தார்.
இதையடுத்து படக்குழுவினர் ரஜினியின் பாசம்மிக்க தாயாக திகழ்ந்த ரெஜினாவின் உதவியை நாடினார்கள். ரெஜினா பக்குவமாக ரஜினியிடம் அந்த படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி பற்றி விளக்கிக் கூறி தைரியம் கொடுத்தார்.
அதுமட்டுமின்றி அந்த காட்சி படமாக்கும் போது தனது வீட்டில் பாதுகாவலராக இருந்த கூர்க்காவை அனுப்பி வைப்பதாக கூறினார். அதன்பிறகே அந்த காட்சியில் ரஜினி நடித்துக் கொடுத்தார்.
'தர்மயுத்தம்' படத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் ரஜினி திமிறும் காட்சிகள், முகத்தில் காட்டிய உக்கிரமான தோற்றங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. அந்த படம் ஓடாது என்றே 90 சதவீதம் பேர் நினைத்தனர். ஆனால் அனைவரது கணிப்பையும் பொய்யாக்கும் வகையில 'தர்மயுத்தம்' படம் வெற்றிகரமாக ஓடி மகத்தான சாதனை படைத்தது.
தமிழ்நாடு முழுவதும் 'தர்மயுத்தம்' படம் வெளியான திேயட்டர்களில் அவரது பிரமாண்ட கட்-அவுட்களை ரசிகர்கள் வைத்தனர். ரசிகர்கள் கொடுத்த இந்த அபரிதமான ஆதரவு ரஜினியை முழுமையான தனி கதாநாயகன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் ரஜினியின் 'இரண்டாவது இன்னிங்ஸ்' ஆர்ப்பாட்டமாகத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து கே.ஆர்.விஜயா தயாரித்த 'நான் வாழ வைப்பேன்' படத்தில் சிவாஜியுடன் இணைந்து ரஜினி நடித்தார். இந்த படத்தில் கடைசி 20 நிமிடங்களில் மட்டுமே ரஜினி வருவார். இந்த படம் வெளியான போது ரஜினி நடிப்பு மக்கள் மனதில் நிற்கும் வகையில் அமைந்தது. இதுபற்றி சிவாஜி, வசனகர்த்தா ஆரூர்தாசிடம் ரஜினியை பற்றி மிகவும் புகழ்ந்து பாராட்டி பெருமையாக குறிப்பிட்டார்.
அதன் பிறகு ஆறில் இருந்து அறுபது வரை, அன்னை ஓர் ஆலயம் ஆகிய படங்களில் ரஜினி இரவு பகலாக நடித்தார். இதில் 'அன்னை ஓர் ஆலயம்' படத்துக்காக நடந்த படப்பிடிப்புகளில் ரஜினி செய்த கலாட்டா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவர் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ரஜினியுடன் ஸ்ரீபிரியா, சுந்தரராஜன், அசோகன், தேங்காய்சீனிவாசன், நாகேஷ், சுருளிராஜன், ஜெயமாலினி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. ரஜினியின் அம்மாவாக பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி நடித்து இருந்தார்.
இந்த படத்தில் ரஜினி காட்டுக்குள் சென்று மிருகங்களை பிடித்து விற்பனை செய்யும் வேடத்தில் நடித்து இருந்தார். இது அவரது தாய் அஞ்சலி தேவிக்கு பிடிக்கவில்லை. மிருகங்களுக்கும் தாய் பாசம் உண்டு. எனவே தாய் மிருகங்களிடம் இருந்து குட்டியை பிரிக்காதே என்று சொல்வார். ஆனால் அதை ரஜினி கேட்கவில்லை.
ஒரு நாள் ரஜினியை தேடி காட்டுக்குள் அஞ்சலி தேவி வருவார். அப்போது குட்டி யானையை பிரிந்து இருந்த தாய் யானை கோபத்தில் அஞ்சலி தேவியை மிதித்து நசுக்கி விடும். அவர் மரண தறுவாயில், ''இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்து விடு'' என்று சொல்லி விட்டு உயிரை விடுவார்.
அந்த குட்டி யானையை மீட்க ரஜினி ஒவ்வொரு சர்க்கஸ் கம்பெனியாக செல்வார். கடைசியில் அந்த குட்டி யானையை கண்டுபிடித்து தாய் யானையிடம் சேர்த்து வைப்பார். இந்த படத்தில் ரஜினி முழுக்க முழுக்க ஒரு குட்டி யானையுடன் நடித்து இருக்கும் காட்சிகள் கலகலப்பாக அமைந்தன. ஆனால் அந்த காட்சிகளை எடுப்பதற்குள் ரஜினி படப்பிடிப்பு பகுதிகளை கலவரப்பூமியாகவே மாற்றி விட்டார்.
அந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டன. சில காட்சிகள் அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் வளாகத்தில் படமாக்கப்பட்டன. மனநலப் பாதிப்பில் இருந்த ரஜினி சத்யா ஸ்டூடியோவிலும், தேவி தியேட்டர் வளாகத்திலும் சத்தம் போட்டு தன்னிலை மறந்து ஏதேதோ செய்ததுண்டு.
இது பற்றி எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது. ஒரு நாள் சத்யா ஸ்டூடியோவுக்கு வந்த அவர் ஸ்டூடியோ நிர்வாகி பத்மநாபனிடம் சொல்லி ரஜினியை அழைத்து வரச்சொன்னார். உடனே ரஜினி வணக்கம் தெரிவித்து எம்.ஜி.ஆரிடம் பணிவாக நின்றார்.
அவரிடம் எம்.ஜி.ஆர்., ''சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நடிகராக இருப்பவர் உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் நிறைய மது அருந்துவதாக கேள்விப்பட்டேன். மது குடிப்பதை விட்டு விடுங்கள். புகைப்பிடிப்பதையும் நிறுத்தி விட்டால் உங்கள் உடல்நலம் சிறப்பாகி விடும். நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
எம்.ஜி.ஆர். சொன்ன அறிவுரையால் ரஜினியிடம் சற்று மாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஆனால் அன்னை ஓர் ஆலயம் படப்பிடிப்பு முடிவதற்குள் ரஜினி செய்த அட்டகாசங்கள் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. அதுபற்றி நாளை பார்க்கலாம்.