சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பரபரப்பு ஏற்படுத்திய கமல்-ரஜினி பிரிவு!

Published On 2025-11-06 16:15 IST   |   Update On 2025-11-06 16:15:00 IST
  • ரஜினி, கமல் இருவருக்கும் வருத்தம் ஏற்பட்டது.
  • தமிழ்நாடு முழுவதும் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினியும், கமலும் 1975-ம் ஆண்டு "அபூர்வ ராகங்கள்" படத்தில் தொடங்கி பல படங்களில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். 1975-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் ரஜினி மொத்தம் 53 படங்களில் நடித்திருந்தார்.

அதாவது ஆண்டுக்கு சராசரியாக 10 அல்லது 11 படங்களில் ரஜினி நடித்து இருந்தார். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு மாதத்துக்கு ஒரு படம் என்ற வகையில் ரஜினி படங்கள் வெளியாகி இருந்தது.

இந்த 53 படங்களில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, அவள் அப்படித்தான், ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, தப்புத் தாளங்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும் உள்பட 13 படங்களில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்திருந்தனர்.

தெலுங்கு, இந்தி படங்களையும் கணக்கிட்டால் இருவரும் 18 படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். இதனால் ரஜினிக்கும், கமலுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே நல்ல நட்பும், சிறப்பான புரிதலும் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் இருவரிடையேயும் சண்டையை மூட்டி விட்டு பிளவை ஏற்படுத்திவிட வேண்டும் என எத்தனையோ பேர் முயற்சி செய்தனர். ஆனால் ரஜினியும், கமலும் பொதுவாக திரை உலகில் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்துடன் இருந்தனர்.

அதாவது ஒருவர் மீது ஏதேனும் அதிருப்தியோ அல்லது சந்தேகமோ ஒருவருக்கு ஏற்பட்டால் அதை இருவரும் உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அதனால்தான் எத்தனையோ "ஜால்ரா"க்கள் எத்தனையோ தடவை முயற்சி செய்தும் அவர்களது நட்பை சீர்குலைக்க இயலவில்லை. அந்த சிறப்பான, உண்மையான நட்பு இன்று வரை நீடித்து நிலைத்து இருப்பதற்கு அவர்கள் இருவரிடமும் அப்போதும், இப்போதும் உள்ள வெளிப்படையான பேச்சே முக்கியக் காரணமாகும்.

அவர்கள் நட்பு "நினைத்தாலே இனிக்கும்" படப்பிடிப்பு நாட்களின் போது மிக, மிக உச்சத்தில் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இருவரும் சிங்கப்பூர் சாலைகளில் ஒன்றாக சுற்றித்திரிந்தனர். ஆனால் அந்த படமே ரஜினியையும், கமலையும் இணைந்து நடிப்பதில் இருந்து நிரந்தரமாக பிரிய வழி வகுத்து விட்டது.

"நினைத்தாலே இனிக்கும்" படம் வெளியான போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களுக்கும் அந்தப் படத்தை பார்க்க ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் திரண்டு வந்தனர். ரஜினி வரும் காட்சிகளில் அவரது ரசிகர்கள் தேங்காயில் கற்பூரம் ஏற்றி காண்பித்து கொண்டாடினார்கள். கமல் வரும்போது அவரது ரசிகர்களும் அதே மாதிரி செய்தனர்.

படம் வெளியான ஒரு வாரத்தில் "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் "சிறப்பாக நடித்திருப்பது யார்?" என்று ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. பல ஊர்களில் "நினைத்தாலே இனிக்கும்" படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மிகப்பெரிய அடி-தடியே நடக்க ஆரம்பித்து விட்டது.

இதைப் பார்த்து ரஜினி, கமல் இருவருக்கும் கடும் வருத்தம் ஏற்பட்டது. அந்த காலக் கட்டத்தில் ரஜினியின் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டு அவரது நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை கமல் கவனித்தப்படி இருந்தார். குறிப்பாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" படத்தில் ரஜினி நடந்து கொண்ட விதம், கமலுக்குள் மிகுந்த அதிருப்தியை கொடுத்திருந்தது. மேலும் இருவரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதால் அதிக சம்பளம் பெற முடியாமல் போகும் சூழலையும் உணர்ந்தனர்.

இதுபற்றி ரஜினியிடம் ஒருநாள் கமல் விளக்கமாகப் பேசினார். "இதற்கு தீர்வு காண என்ன செய்யலாம்?" என்று ரஜினி கேட்டார். அதற்கு கமல், "இனி நாம் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து விடலாம். தனித்தனியாக ஹீரோ வேடங்களில் நடித்தால் இருவருக்கும் அது லாபமாக இருக்கும்" என்றார்.

இந்த யோசனை ரஜினிக்கும் பிடித்திருத்தது. உடனே அவர் சம்மதம் தெரிவித்தார். அடுத்த நாளே கமலும், ரஜினியும் ஒன்றிணைந்து நிருபர்களை அழைத்துப் பேட்டி கொடுத்தனர். "இனி நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டோம்" என்று அறிவித்தனர். அவர்களது இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பேட்டியில் ரஜினி இதுபற்றி மனம் திறந்து கூறி இருந்தார். அந்த பேட்டி வருமாறு:-

''அபூர்வராகங்களில் நடிக்க வந்தபோது நான் ஒரு புது நடிகன். யாருக்கும் அறிமுகம் இல்லாத நடிகன். ஆனால் கமல்ஹாசன் 1970-களிலேயே கதாநாயகனாக பிரபலம் ஆகி இருந்தார். அவர் தனது நடிப்புத் திறமையால் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கப்போகிறோம் என்பது எனக்கு அந்த சமயத்தில் பிரம்மாண்டமான உணர்வுகளை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்ல கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாட்கள் என் மனதில் பசுமையாக உள்ளன. அவருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. அவரிடம் இருந்து நான் நடிப்பு விஷயத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். திரைப்பட கல்லூரியில் படித்ததை விட அவர் மூலம் எனக்கு கண் எதிரில் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. படப்பிடிப்பு நேரங்களில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைத்தது அவர்தான். நான் என்ன சந்தேகம் கேட்டாலும் அவரும் ஆர்வத்துடன் எனக்கு ஆலோசனைகள் வழங்குவார்.

நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் எல்லாம் அவர் தான் கதாநாயகனாக நடித்தார். நான் வில்லனாக நடித்தேன். அதற்காக அவர் என்னை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு நடத்தியதே கிடையாது. சக கலைஞன் என்ற முறையில் அவர் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பார். அதுபோல்தான் அவர் எந்த ஒரு வித்தியாசமும் பார்க்காமல் என்னோடு பழகினார்.

பொதுவாக திரையுலகில் யாரும் மற்றவரை படங்களில் நடிப்பதற்கு சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் என்னை பல படங்களுக்கு சிபாரிசு செய்தார். பல தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றி அவர் நிறைய எடுத்து கூறி இருக்கிறார். நிறைய இயக்குனர்களுக்கு என்னைப் பற்றி சொல்லி வாய்ப்புகள் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

அவர் நினைத்து இருந்தால் என்னைப் பற்றி சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் மனதில் எனக்கு தனி இடம் இருந்ததால் தொடர்ந்து உதவிகள் செய்து கொண்டே இருந்தார். அவர் மட்டும் என்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தால் எந்த டைரக்டரும், தயாரிப்பாளரும் என்னை தேடி வந்து இருக்க மாட்டார்கள்.

ஆனால் கமல்ஹாசன் என்னைப் போட வேண்டும் என்று பல டைரக்டர்களிடம் வற்புறுத்தி சொல்லி இருக்கிறார். அதனால்தான் 1976 மற்றும் 1977 -ம் ஆண்டுகளில் எனக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தது. அதற்கு ஆதாரமாக எத்தனையோ சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். உதாரணத்திற்கு 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் என் கேரக்டருக்கு வேறு ஒருவரைத்தான் டைரக்டர் ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்து இருந்தார்.

ஆனால் கமல்ஹாசன்தான் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நான் நடிப்பதற்கான அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்காக அவர் என்னுடைய தனிப்பட்ட நடிப்பு விஷயங்களில் ஒருநாள் கூட தலையிட்டது இல்லை. குறிப்பாக படங்களில் என் வேடம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் எல்லாம் ஒரு போதும் தலையிட்டதே இல்லை.

அதேபோல 'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தபோது நானும், கமலும் இரவு முழுவதும் சிங்கப்பூர் தெருக்களை சுற்றி வருவோம். விடிய விடிய சுற்றி பார்த்துக் கொண்டேஇருப்போம். அதிகாலையில்தான் மீண்டும் ஓட்டலுக்கு வந்து தூங்குவோம். சிறிது நேரம் தூங்குவதற்குள் படப்பிடிப்புக்கு அழைத்து செல்ல கார் வந்துவிடும். அவசரம் அவசரமாக நானும் அவரும் புறப்பட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு செல்வோம்.

படப்பிடிப்பு நடக்கும் நேரங்களில் ரொம்ப ஜாலியாக இருக்கும். நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறோம். மதியம் படப்பிடிப்பு இடைவேளையில், நேரம் கிடைக்கும்போது ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு தூங்கி ஓய்வு எடுப்போம். சில சமயங்களில் எங்களது உடைகளைக் கூட நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

அவ்வளவு ஆழமானது எங்களின் நட்பு. இப்போது நினைத்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அதை நான் என் வாழ்வின் பொற்காலமாக கருதுகிறேன். இந்த நிலையில்தான் 'நினைத்தாலே இனிக்கும்' படம் முடிந்த பின்பு ஒரு நாள் நாங்கள் சந்தித்து பேசினோம். அப்போது தமிழ் திரையுலகில் இருவரும் சேர்ந்தே நடித்துக் கொண்டிருந்தால், முன்னுக்கு வர முடியாது. எனவே இனி படங்களில் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

படங்களில் இனி கதாநாயகனாக நடித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கமல்ஹாசன் கூறினார். அதுதான் பொருளாதார ரீதியாகவும் நல்லது என்றும் கமல்ஹாசன் எனக்கு ஆலோசனை வழங்கினார். அதுவே என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அன்று முதல் நடிப்பில் நான் எனக்கென ஒரு தனிப்பாதை அமைத்துக் கொண்டேன்.

இவ்வாறு ரஜினி அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் ரஜினியிடம் ஏற்பட்டு இருந்த உடல்நல பாதிப்பும், மனநல பாதிப்பும் நீங்காமல் நீடித்துக் கொண்டே இருந்தது. அலாவுதீனும் அற்புத விளக்கும், அன்னை ஓர் ஆலயம் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பில் ரஜினியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வருத்தப்பட்டார். அவர் ரஜினியை அழைத்து அறிவுரை கூறினார். எம்.ஜி.ஆர். ரஜினிக்கு என்ன அறிவுரை சொன்னார் என்பதை நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News