ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினிக்கு சூனியம் வைத்தது யார்?
- ரஜினி விஜயா நர்சிங் ஹோமில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
- பாலச்சந்தருக்கு கடும் கோபம் வந்தது.
ரஜினியை என் வீட்டுக்கு அழைத்து செல்லட்டுமா? என்று ரெஜினா வின்சென்ட் கேட்டதும் டாக்டர் செரியனுக்கு முதலில் மிகவும் தயக்கமாக இருந்தது. அப்போது ரஜினி, "நான் அம்மா வீட்டில் இருந்தால் வசதியாக இருக்கும்" என்று கூறினார்.
டாக்டர் செரியன் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவைப் பார்த்தார். அந்த சமயத்தில் மருத்துவமனையில் திரைத்துறை பிரபலங்களும் மற்றும் பெங்களூர் நண்பர்களும் இருந்தனர். அவர்களுக்கும் ரெஜினா அம்மாவின் பாசத்தால் ரஜினி கட்டுப்பட்டு அமைதியாக மாறியது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரெஜினா வின்சென்ட் பற்றி அப்போதுதான் முதல்முறையாக தெரிய வந்தது.
திரை உலகிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஜினிக்கு இப்படியொரு பெயரில் ஒருவர் பழக்கமாகி இருக்கிறார் என்பது வெளிஉலகுக்கும் அப்போதுதான் முதன் முறையாக தெரிய வந்தது. ரஜினி ஆஸ்பத்திரியில் தன்னை மறந்து படுத்த படுக்கையாக இருந்த நேரங்களில் கூட ரெஜினா அம்மா என்று அவர் பெயரை உச்சரித்ததன் மூலம் அவர் மனதுக்குள் தாய் பாசம் எந்த அளவுக்கு ஆழமாக பதிந்து இருந்தது என்பது தெரிய வந்தது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ரஜினியின் உள்ளத்தில் மட்டுமின்றி தாய் பாச உணர்வோடும் பின்னிப்பிணைந்தவராக ரெஜினா வின்சென்ட் இருந்தார். டாக்டர் செரியன் தலைமையிலான மருத்துவக் குழுவுக்கும் மருந்துகளை மிஞ்சிய சக்தியாக ஒரு தாயின் பாசம் இருப்பதை கண் கூடாகப் பார்த்தனர்.
அந்த சமயத்தில் டாக்டர் செரியனிடம் ரெஜினா வின்சென்ட் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். "ரஜினிக்கு ஓய்வு வேண்டும். அவரை நன்றாக தூங்க வைக்க வேண்டும். அவ்வளவுதானே. அது ஒரு பிரச்சினையே இல்லை. என் வீட்டுக்கு நான் அழைத்து செல்கிறேன். என் பங்களாவுக்கு வந்தால் ரஜினி நிம்மதியாக தூங்குவார். அவரை என் வீட்டுக்கு அழைத்து செல்லட்டுமா?" என்று கேட்டார்.
டாக்டர் செரியனுக்கு இதில் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பம் நீடித்தது. சிகிச்சை அளிக்க வேண்டிய முக்கியமான நேரத்தில் ரஜினியை எப்படி வெளியே அனுப்புவது என்று அவர் தயங்கினார். அவரது மனதில் தோன்றிய எண்ணத்தை ரெஜினா வின்சென்ட் புரிந்துக் கொண்டார்.
அவர் டாக்டர் செரியனிடம், "நீங்கள் கவலைப்பட வேண்டாம். எந்த பிரச்சினையும் ஏற்படாது. என்னை நம்பி நீங்கள் அனுப்பலாம்" என்றார். கடைசியில் டாக்டர் செரியன் அதற்கு சம்மதித்தார். இதையடுத்து ரஜினி விஜயா நர்சிங் ஹோமில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு பங்களாவின் கீழ்தளத்தில் உள்ள ஒரு அறையை ரஜினிக்காக ரெஜினா வின்சென்ட் ஒதுக்கிக் கொடுத்தார். ரஜினி அன்றிரவு அங்கு நிம்மதியாக படுத்துத் தூங்கினார். ரெஜினா வின்சென்ட் சொன்னதை கேட்டு ரஜினி முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டு இருந்தது. என்றாலும் அவர் நள்ளிரவில் திடீரென விழித்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக சமையல்காரர் மீரானையும் அங்கே விடிய விடிய ரெஜினா வின்சென்ட் காவலுக்கு வைத்து இருந்தார்.
அன்று இரவு முழுவதும் ரஜினி நிம்மதியாகத் தூங்கினார். அவரிடம் முழுமையான மாற்றம் உருவாகி இருந்தது. காலையில் எழுந்த போது ரஜினி புத்துணர்ச்சியோடு இருந்தார். அவருக்கு ரெஜினா வின்சென்ட் காலை உணவு கொடுத்து மதுஅருந்தக் கூடாது என்ற அறிவுரையை மீண்டும் சொன்னார். பிறகு டாக்டர் செரியனுக்கு போன் செய்தார்.
'சார்... ரஜினி நேற்றிரவு இங்கு நன்றாக தூங்கினார். இப்போது அமைதியாக இருக்கிறார். எந்தக் கவலையும் வேண்டாம்" என்றார். இதைக் கேட்டதும் டாக்டர் செரியனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ரஜினியை எப்படி தூங்க வைத்தீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு ரெஜினா வின்சென்ட், "எந்த மருந்தும் இல்லை. நம்பிக்கையான இடத்தில் இருப்பதாக நினைத்து தூங்கி விட்டார்" என்றார். என்றாலும் டாக்டர் செரியனுக்கு ஆச்சரியம் நீங்கவில்லை. ரஜினியை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்றுக் கொண்ட ரெஜினா வின்சென்ட் அன்று மாலை 5 மணிக்கு ரஜினியுடன் வருவதாக கூறியிருந்தார். ஆனால் அன்று காலையிலேயே ரஜினி படப்பிடிப்பு இருக்கிறது. அதை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டு புறப்பட்டார். அவரிடம் மாலை 5 மணிக்கு விஜயா நர்சிங் ஹோமுக்கு வந்து விட வேண்டும் என்று ரெஜினா வின்சென்ட் உத்தரவிட்டு இருந்தார்.
அன்று மாலை 5 மணிக்கு அவர் மருத்துவ மனைக்கு சென்று காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் கழித்து சர்வ சாதாரணமாக ரஜினி வந்தார். அவருக்கு டாக்டர்கள் குழு மீண்டும் சிகிச்சை அளிக்கத் தொடங்கியது. தனி அறையில் ரஜினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ரெஜினா வின்சென்ட்டை வெளியில் இருக்குமாறு கூறினார்கள்.
இதைக் கேட்டதும் ரஜினிக்கு ஆவேசம் வந்து விட்டது. ரெஜினா வின்சென்ட்டை டாக்டர்கள் அவமரியாதை செய்து விட்டதாக நினைத்தார். அடுத்த நிமிடமே அந்த அறையில் இருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்து டாக்டர்கள் மீது வீசினார். டாக்டர்கள் பயந்து அலறியடித்து ஓடினார்கள்.
இதை கண்ட தலைமை டாக்டர் செரியன் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தார். இனி ரஜினிக்கு எங்களால் சிகிச்சை அளிக்க இயலாது. அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறி விட்டார். அவரை ரெஜினா வின்சென்ட்டை எவ்வளவோ சமரசம் செய்து பார்த்தார். ஆனால் டாக்டர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து ரெஜினா வின்சென்ட் காரில் ஏறி தனது வீட்டுக்கு சென்றார். அப்போது ரஜினியும் தனது காரில் அவரை பின் தொடர்ந்து சென்றார். வீட்டுக்கு சென்றதும் ரஜினிக்கு பொறுமையாக ரெஜினா வின்சென்ட் மீண்டும் ஆலோசனை வழங்கினார். அப்போதுதான் டாக்டர்களை அடிக்க பாய்ந்தது எவ்வளவுப் பெரிய தவறு என்று ரஜினிக்கு புரிய வந்தது.
தன்னையும் அறியாமல் இது நடந்து விட்டதாக அவர் வருத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் வழக்கம் போல படப் பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கி இருந்தார். ஒரு நேரம் சாதாரணமாக இருப்பதும், சிறிது நேரத்திலேயே ஏதாவது ஒரு காரணத்துக்காக ரஜினி கண்கள் சிவக்க கோபப்படுவதும் படப்பிடிப்பு தளங்களில் சர்வ சாதாரணமாக நடந்தது. இது ரஜினியை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களை மிகவும் சங்கடப்பட வைத்தது. ரஜினி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று தவித்தனர்.
ஒரு நாள் ரெஜினா வின்சென்ட் வீட்டில் ரஜினி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அங்கு பிராமண நண்பர் ஒருவர் வந்தார். அவர் ரஜினியைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் முகம் மாறினார். ரஜினி பக்கத்தில் அவர் செல்வதற்கே அவர் பயந்தார்.
இதை ரெஜினா வின்சென்ட் கவனித்துக் கொண்டே வந்தார். "எதற்காக ரஜினியை பார்த்து பயப்படுகிறீர்கள்? அவர் இப்போது நல்ல மனநிலையில்தான் இருக்கிறார். கவலை வேண்டாம்" என்றார். அதற்கு அந்த பிராமண நண்பர் கூறுகையில், "எனக்கு பயம் இல்லை. ஆனால் இவரைப் பற்றி உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இவருக்கு சிலர் சூனியம் வைத்து இருக்கிறார்கள். 4 சூனியம் இவர் மீது ஏவி விடப்பட்டு இருக்கிறது. எனவே இவரிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்" என்று கூறினார்.
இதை கேட்டதும் ரஜினிக்கும், ரெஜினா வின்சென்ட்டுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. கிறிஸ்தவரான ரெஜினா வின்சென்ட்டுக்கு சூனியத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் நெருங்கிய குடும்பத்து நண்பர் சொன்னதால் அவரால் அதை அலட்சியப்படுத்தவும் முடியவில்லை.
ரஜினிக்கும் அதிர்ச்சி நீங்கி பயம் ஏற்பட்டது. ஏற்கனவே அவரிடம் திரையுலகை சேர்ந்த சிலர், "உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள்" என்று சில வாரங்களுக்கு முன்புதான் கூறி இருந்தனர். ரஜினியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்தான் அந்த செயலில் ஈடுபட்டதாகவும் திரையுலகில் வதந்தி பரவி இருந்தது.
மேலும் ரஜினி அந்த சமயத்தில் ஒரு நடிகையை உயிருக்கும் மேலாக நேசித்தார். ஆனால் அந்த நடிகையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு முக்கிய பிரமுகர் அதை அறிந்து ரஜினி மீது ஆட்களை ஏவி தாக்குதல் நடத்த செய்தார். இதுவும் ரஜினியிடம் ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஏற்கனவே உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தனக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ என்று மிகவும் பயப்பட்டார். வெளியில் செல்வதற்கு கூட அவருக்கு சற்று யோசனையாக இருந்தது. தனது பாதுகாப்புக்காக ரஜினி எப்போதும் இடுப்பில் ஒரு சிறு கத்தியை சில நாட்கள் மறைத்து வைத்திருந்தார் என்றால், அவர் எந்த அளவுக்கு மனநலத்தில் பாதிக்கப்பட்டு இருந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ரஜினியின் மனநலப் பாதிப்பால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சினை உருவாகிக் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், தர்மயுத்தம், நான் வாழ வைப்பேன், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஓர் ஆலயம் ஆகிய 6 படங்களில் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
இதில் நினைத்தாலே இனிக்கும் படம் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட வேண்டியது இருந்ததால் கடைசி கட்ட படப்பிடிப்பு நடத்தப் பட்டது. அப்போது படக்குழுவினருடன் ரஜினி சண்டை போட்டார். இதனால் பாலச்சந்தருக்கு கடும் கோபம் வந்தது. ரஜினியை விட்டு பிரிய முடிவு செய்தார். இதனால் ரஜினி என்ன செய்தார் என்பதை நாளை பார்க்கலாம்.