சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரெஜினாவை தாயாக தத்தெடுத்தார்!

Published On 2025-11-03 12:45 IST   |   Update On 2025-11-03 12:45:00 IST
  • ரெஜினா தொடர்ந்து வழங்கிய அறிவுரைகள் காரணமாக படப்பிடிப்பு நேரங்களில் ரஜினி மது பாட்டில்களை தொடுவதே இல்லை
  • ரஜினிக்கு என்ன நடந்தது என்பது மற்றவர்கள் மூலம் ரெஜினாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது.

ராகவேந்திர சுவாமிகள்தான் உங்கள் வீட்டுக்கு என்னை வரச் சொன்னார் என்று ரஜினி சொன்னதை கேட்டதும் ரெஜினா வின்சென்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் மதுபோதையில் மிதக்கும் ரஜினிக்குள் இப்படி ஒரு ஆழமான ஆன்மீகம் புதைந்து கிடக்கிறதா? என்று நினைத்து அவர் பிரமித்தார். ரஜினி மீது இதுவரை இருந்த பாசம் மரியாதையாக மாறியது.

ரெஜினா வின்சென்ட் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மற்ற மதங்களிலும் நிறைய நண்பர்கள் இருந்தனர். மற்ற மதத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்டு மதிப்புக் கொடுப்பவர். அதனால்தான் ரஜினி ராகவேந்திரரை பற்றிச் சொன்னதும் அவருக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது.

ரஜினி சொன்ன பதிலை அவர் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டார். 'சரி... இனி நீ இந்த வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்ன வேண்டுமானாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்' என்றார். இதைக் கேட்டதும் ரஜினி மிகவும் உருகிப்போனார். ரெஜினா காலில் விழுந்து ஆசிபெற்று நன்றி கூறினார்.

அதன் பிறகு ரஜினி ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெஜினா வீட்டுக்கு நினைத்த போதெல்லாம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தினார். சில சமயங்களில் அவர் அந்த பங்களாவுக்குள் செல்வதுகூட மாடியில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரியாது. பங்களா பின் புறம் உள்ள புல்வெளித் தோட்டத்தில் ரஜினி தன்னந்தனியாக சுற்றும் போதுதான் அவர் அங்கு வந்து இருக்கிறார் என்பதையே தெரிந்து கொள்வார்கள். அந்தளவுக்கு ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு செல்வதை ரஜினி சர்வசாதாரணமாக பழக்கத்தில் வைத்து இருந்தார்.

ரெஜினா வீட்டுக்கு செல்லும் போது ஒரு தாயை பார்த்த உணர்வு தனக்கு ஏற்படுவதாகவும் ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லுவது உண்டு. ரெஜினா தொடர்ந்து வழங்கிய அறிவுரைகள் காரணமாக படப்பிடிப்பு நேரங்களில் ரஜினி மது பாட்டில்களை தொடுவதே இல்லை என்ற நிலை உருவானது. இதை அறிந்து ரெஜினா வின்சென்ட் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு சில நண்பர்களின் கெட்ட சகவாசத்தால் ரஜினி மதுகுடிப்பது மாறவில்லை. மாறாக சில நாட்களில் அவர் மது குடிப்பது அளவுக்கு மீறியதாக சென்றது. அவரது நண்பர்களில் சிலர், அதாவது திரைத்துறையில் உள்ள சிலர் தங்களது சுய நலத்துக்காக ரஜினியை அப்படி மது பழக்கத்துக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் ரஜினி அதிக அளவில் மது குடிக்க ஆரம்பித்து இருந்தார். அதோடு மற்ற போதை பொருட்களையும் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி இருந்தார். இதனால் ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு அவர் செல்வதும் சற்று குறைந்து போனது. பிப்ரவரி மாதம் கடைசி வாரம் அவர் ரெஜினா வின்சென்ட் வீட்டு பக்கமே செல்லவில்லை.

இந்தநிலையில்தான் ரஜினி படப்பிடிப்பு இடங்களிலும் மற்ற நேரங்களிலும் தன்னை எதிர்த்து பேசுபவர்களை அடிக்கிறார் என்ற தகவல் பரவியது. இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் ரஜினி மனநிலையில் மாற்றம் ஏற்பட்ட தகவல் ரெஜினா வின்சென்ட்டுக்கும் சிலர் மூலம் தெரிய வந்தது. அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த நிலையில் ஒரு நாள் ரஜினி 4 நாட்களுக்கு பிறகு ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு வந்திருந்தார். அவரிடம் ரெஜினா, '4 நாட்களாக இந்த பக்கமே வரவில்லையே? எங்கே போய் இருந்தாய்?' என்று கேட்டார். அதற்கு ரஜினி, 'எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. எனவே ஆஸ்பத்திரிக்கு போய் இருந்தேன்' என்றார்.

ஆனால் ரஜினிக்கு என்ன நடந்தது என்பது மற்றவர்கள் மூலம் ரெஜினாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது. அன்று இரவு ரஜினியை வீட்டுக்குள் வந்து சாப்பிடுமாறு ரெஜினா அழைத்தார். அப்போது வீட்டுக்குள் ரெஜினாவின் நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் நிறைய பேர் அமர்ந்து இருந்தனர். ரஜினியை கண்டதும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளிநாட்டில் இருந்து வந்து இருந்த ஒரு விருந்தினர் ரஜினியை சுட்டிக் காட்டி, 'இவர் யார்?' என்று கேட்டார். அதற்கு ரெஜினா வின்சென்ட், 'இவரும் என்னுடைய ஒரு மகன் மாதிரிதான்' என்று அறிமுகம் செய்தார். இதைக் கேட்டதும் ரஜினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது.

விருந்து முடிந்து அனைவரும் புறப்பட்டு சென்றதும், ரஜினி கண்ணீர் மல்க ரெஜினா வின்சென்ட் கால்களில் விழுந்தார். கதறி கதறி அழுதார். அவரை ரெஜினா வின்சென்ட் ஆசு வாசப்படுத்தி, 'எதற்காக அழுகிறாய்?' என்று கேட்டார். அதற்கு ரஜினி, 'என்னையும் ஒரு மகனாக ஏற்றுக் கொண்டு அனைவரிடமும் சொன்னீர்களே? எனக்கு அது போதும்' என்று கண்ணீர் விட்டார். ரெஜினா வின்சென்ட்டும் கண்கள் கலங்க நின்றார்.

இப்படி ரஜினிக்கும், ரெஜினா வின்சென்ட்டுக்கும் இடையே அந்த குறுகிய காலத்திற்குள் எத்தனையோ தடவை ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையே நிலவும் பாசப் போராட்டம் போல பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் ரெஜினா வின்சென்ட் தவறாமல் ரஜினிக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அவ்வளவு அறிவுரைகள் சொன்ன நிலையிலும் ரஜினி மார்ச் மாதம் தொடக்கத்தில் மிகவும் தறிக்கெட்டு போய் விட்டார். கடுமையான நரம்புதளர்ச்சி காரணமாக அவரை பாதித்த மனநலம் உச்சக் கட்டத்தை தொட்டு இருந்தது. யாராலும் அவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதன் எதிரொலியாகத்தான் மதுரையில் நடந்த சிவாஜிகணேசன் பாராட்டு விழாவின் போது ரஜினி அவரையும் அறியாமல் அத்துமீறி நடந்துக் கொண்டார். வடபழனி விஜயா நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் ரஜினி அடிக்கடி 'ரெஜினா அம்மாவை கூப்பிடுங்கள். ரெஜினா அம்மாவை கூப்பிடுங்கள்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இதன் காரணமாகத்தான் விஜயா நர்சிங் ஹோமில் இருந்து டாக்டர்கள் போனில் ரெஜினா வின்சென்ட்டை தொடர்பு கொண்டனர். அவரிடம் டாக்டர் செரியன் போனில் பேசினார். 'அம்மா.... இங்கு எங்கள் மருத்துவ மனையில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மிகக் கடுமையான நரம்பு தளர்ச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நோய் அதிகமாகும் பட்சத்தில் மனநலம் கடுமையாக பாதிக்கப்படும். அந்த நோயின் தொடக்க நிலையில் அவர் இருக்கிறார்.

அவரை 3 நாட்கள் நன்றாக தூங்கும்படி நாங்கள் சொல்லி இருந்தோம். ஆனால் அவர் தூங்க மறுத்து ரகளை செய்து கொண்டே இருக்கிறார். அவரை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று காலை முதல் அவர் உங்கள் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தால் அவர் அமைதியாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வர முடியுமா?' என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் ரெஜினா வின்சென்ட்டுக்கு கடுமையான அதிர்ச்சியாகி விட்டது. இது பற்றி அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். அவரது அனுமதியை பெற்றுக் கொண்டு உடனே வடபழனி விஜயா நர்சிங் ஹோமுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ரஜினியை பார்த்த அவருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.

கூண்டுக்குள் அடைப்பட்ட சிறுத்தை போல ரஜினி ஆவேசமாக இருந்தார். அவரிடம் ஒருவித கொந்தளிப்பும் இருந்தது. அந்த கொந்தளிப்பு காரணமாக அவர் அருகில் செல்லவே ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் அனைவரும் பயந்தனர்.

அப்போது ரஜினி முன்பு சென்று ரெஜினா வின்சென்ட் நின்றார். அவரை பார்த்ததும், 'அம்மா....' என்று ரஜினி வாயில் இருந்து பாசத்தோடு வார்த்தைகள் வெளியில் வந்தன. கதறி கதறி அழுதார். "எனக்கு என்னவோ ஆகி விட்டது. என்னை இங்க இருந்து கூட்டிச் சென்று விடுங்கள்" என்று அழுதார்.

அவரை பார்க்கவே ரெஜினா வின்சென்ட்டுக்கு பரிதாபமாக இருந்தது. அவரது கண்களும் கலங்கின. ரெஜினா வின்சென்ட் பேசத் தொடங்கிய பிறகு, ரஜினியிடம் அதிரடியாக மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதுவரை புயல் போல கொந்தளித்துக் கொண்டு இருந்த அவர் சாந்தமாக மாறி இருந்தார். அவரிடம் இருந்த ஆவேசமும், ஆர்ப்பாட்டமும் எங்கே போனது என்றே தெரியவில்லை. இது ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

புலி போல உறுமிக் கொண்டு இருந்த ஒருவர், பூனைக்குட்டி போல மாறி விட்டதை பார்த்தனர். அதற்கு காரணம் ரெஜினா அம்மாவின் தாய் பாசம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டாக்டர் செரியனுக்கும் இது வித்தியாசமாக தெரிந்தது. அவரிடம் ரெஜினா வின்சென்ட் ஒரு கோரிக்கை வைத்தார். "ரஜினியை நான் பார்த்துக் கொள்கிறேன். விட்டுவிடுங்கள்" என்றார். இது டாக்டர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News