null
ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- தாடியுடன் முதல்நாள் படப்பிடிப்பு!
- சிவாஜிராவிடம் காணப்பட்ட கூர்மையான பார்வை அபூர்வராகங்கள் படப்பிடிப்பில் இருந்த ஒவ்வொருவரையும் முதல் நாளே கவர்ந்தது.
- நான் கேமராவைப் பார்த்தோ அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்தோ பயப்படவில்லை.
ராகவேந்திர சுவாமிகளின் அருள் ஆசி சிவாஜிராவுக்கு எப்போதுமே இருக்கிறது என்பதற்கு அவர் சினிமா உலகில் முதல் காலடி எடுத்து வைத்த நாள் வியாழக்கிழமையாக அமைந்ததை இன்றும் பலர் குறிப்பிட்டு சொல்கிறார்கள். ராகவேந்திர சுவாமிகளை நினைத்துக் கொண்டுதான் முதல் நாள் படப்பிடிப்பில் சிவாஜிராவ் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தார்.
கறுப்பாக ஒரு இளைஞன் துறுதுறுவென அங்கும் இங்கும் செல்வதை ஸ்ரீவித்யாவும், நாகேசும் கவனித்துக் கொண்டே இருந்தனர். பாலச்சந்தர் பார்வை படாத நேரத்தில் மறைவிடத்துக்கு ஓடிச்சென்று சிவாஜிராவ் தம் அடித்து விட்டு வந்ததையும் அவர்கள் கவனிக்க தவறவில்லை.
சிவாஜிராவிடம் காணப்பட்ட கூர்மையான பார்வை அபூர்வராகங்கள் படப்பிடிப்பில் இருந்த ஒவ்வொருவரையும் முதல் நாளே கவர்ந்தது. ஆனால் சிவாஜிராவோ தெரியாத வேலை! ஏன்டா இந்தத் தொழிலுக்கு வந்தோம் என்று சலிப்பான மனநிலையுடன் காணப்பட்டார்.
சிவாஜிராவின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.....
என் முகத்துக்கு முன்னால் கிளாப் வந்தது.
டைரக்டர் பாலச்சந்தர் சார், ''கிளாப்'' என்று கத்தினார். அந்த கிளாப் அடித்த சத்தத்தில் எனக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
சினிமாவில் நான் அறிமுகமாகும் முதல் காட்சி அதுவே. பேச வேண்டிய வசனம் 'பைரவி வீடு இதுதானா?' என்ற ஒரே ஒரு வரிதான். அதற்கு கமல் 'ஆமாம். நீங்க யாரு?' என்று கேள்வி கேட்பார். உடனே 'நான் பைரவியோட புருஷன்' என்று சொல்ல வேண்டும்.
காட்சி திரையில் ஓடும்போது சுருதி பேதம் என்கிற தனி டைட்டில் கார்டு தோன்றும். இந்த சின்ன சீனை எடுப்பதற்குள் கலாகேந்திரா யூனிட்டே தவித்து விட்டது. காலையில் தேநீர் நேரத்தில் ஆரம்பித்த வேலை 'லன்ச் பிரேக்' வரை இழுத்தது.
'என்னை நடிகனாக்கும் முயற்சியை கே.பாலச்சந்தர் ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டார்' என்றுதான் சொல்ல வேண்டும். 'பைரவி வீடு இதுதானா?', 'நான் பைரவியோட புருஷன்' இந்த டயலாக்குகளை ஆயிரம் தடவை சொல்லி இருப்பேன்.
லைட் பாயில் இருந்து அசிஸ்டென்ட் டைரக்டர் வரை, என்னை வசனம் சரியாகச் சொல்லச் சொல்லி வெறுத்துப் போயிட்டாங்க. தெரியாத, புரியாத வேலை. ஏன்டா இந்தத் தொழிலுக்கு வந்தோம்னுகூட ஒரு சலிப்பு. என் முகத்துக்கு முன்னாள் கிளாப் வந்தது. கிளாப் அடிச்ச சப்தத்திலே பேசத் தெரியாமல் டயலாக்கை உளறினேன்.
நான் கேமராவைப் பார்த்தோ அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்தோ பயப்படவில்லை. என்னுடைய பயமெல்லாம் பாலசந்தர் சார்தான், நான் சரியாக பேசி நடிக்கவில்லை என்று பாலச்சந்தர் சார் நினைத்தார். இதை நான் அவரது முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
பாலசந்தர் சார் எவ்வளவு முன்கோபக்காரர் என்பது அவரோடு பழகியவர்களுக்குத் தான் தெரியும். கூண்டுல இருக்கிற புலி மாதிரி வெளியே இருப்பார். கேமிரா வழியாப் பார்த்தார் என்றால் கூண்டை விட்டு வெளியே வந்த புலிதான். எப்படிப்பட்டவங்களுக்கும் அவர் முன்னாடி தொழில் பக்தி வந்து விடும், பயம் வந்து விடும். எனக்கும் அப்படித்தான் பயம் வந்தது.
சினிமா உலகில் கால் வைத்து விட்டோம். ஏதோ ஒரு சந்தோஷம், அங்கிருந்த சுவர் பக்கமாக ஓடிச்சென்று சிகரெட்டை எடுத்து வாயிலே வைத்து புகை புகையாய் ஊதினேன். அப்போது திடீரென்று "சிவாஜி" என்ற குரல் கேட்டது. முதல் காட்சியில் நடிக்க ஓடினேன்.
படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கமல் மேலிருந்து மறுபடியும் என்னிடம் கேட்கிறார்.
"நீங்க யாருன்னு சொன்னீங்க?"
"பைரவியோட புருஷன்." அதே வசனத்தை சொன்னேன். உடனே கமல் என்னை இழுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வெளியே அழைத்துப் போனார்.
அந்த காட்சியில் கமலின் நடிப்பைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நாம் எப்போது இப்படி நடிகன் ஆவது என்று கனவு கண்டேன். அந்த ஒரு சீன் முடிந்தது.
நடித்து முடிந்த பிறகு நாகேஷ் சார் என் அருகில் வந்தார். "சிவாஜிராவ் இங்கே வாங்க. நடிக்கறது ஒண்ணும் பெரிய இதே கிடையாது. ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. பாலு என்ன செய்யறாரோ, ெசால்றாரோ அதை அப்படியே நீங்க இமிடேட் செய்யுங்கள். அதைத்தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு" என்று சொல்லி முதுகில் தட்டிவிட்டு சென்றார்.
நாகேஷ் சார் பேச... பேச... நான் வாய் விட்டு சிரித்தேன். அவரது அறிவுரை எனக்கு இப்பவும் அது ஒரு டானிக் மாதிரி தெம்பு தரும் வார்த்தைகள்தான். தப்புகள் பண்ணி பாலசந்தர் சார் கிட்டே திட்டு வாங்கி 'அபூர்வ ராகங்கள்' படத்தை முடித்தேன்.
மத்தியானம் ஆனந்த் சார் வந்தார்.
'தாடியை எடுத்துடுங்க. இன்னும் ஒரே ஒரு சீன்தான் என்று சொன்னார். ஏ.வி.எம். ஸ்டூடியோ பக்கத்திலே ஒரு வீடு. எனக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் ஒரு லவ் சீன். 2 பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு பேசிக்கிட்டே சிரிச்சுக்கிட்டே நடந்து வருகிற மாதிரி காட்சி அமைத்து இருந்தார்கள்.
வசனம் இல்லை. வெறும் உதடு அசைப்புதான். இஷ்டம் போல பேசுங்க என்று சொன்னார்கள். அந்தக் காட்சியில் ஸ்ரீவித்யா மலையாளத்தில் பேசிக் கொண்டே வந்தார். நான் கன்னடத்தில் ஏதோ பேசிக் கொண்டே வந்தேன். நாங்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் என்ன பேசினோம் என்பது புரியாமல் பேசினோம். எப்படியோ அந்த காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்தது.
நீங்க வீட்டுக்குப் போகலாம் என்று என்னிடம் சொன்னார்கள். நான் மேக்கப்பை கலைத்து விட்டு வெளியே வந்தேன். அங்கே ஜெயசுதா உட்கார்ந்து இருந்தார்கள். எனக்கு ஒரே குஷி. முன்னால் இருந்த சேர், ெபஞ்ச் ஒன்றும் தெரியவில்லை.
ஜெயசுதாவைப் பார்த்துக்கிட்டே போயி, தடுக்கிப் பல்டி அடித்து விழுந்தேன். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து என்னைத் தூக்கி விட்டார்கள். நான் தடவிப் பார்த்துக்கிட்டேன். பின்னால் பேண்ட் கிழிஞ்சி போயிடுச்சு. ஜெயசுதா வேற என்னையே பார்த்துக்கிட்டிருந்தாங்க.
பின்னாலேயே திரும்பிப் போகலாம்னா பேண்ட் கிழிஞ்சு போயிருக்கு. டைரக்டர் சாருக்கு இங்கிருந்தே சொல்லிட்டுப் போயிடலாம்னா எங்க தப்பா நினைப்பாரோ என்று பயம் வந்தது.
எப்படியோ சமாளிச்சு கையை முன்னால், பின்னால் வச்சு மறைச்சுக்கிட்டு ஒரு வழியா வீட்டுக்கு வந்தேன். படமும் முடிஞ்சது.
அடுத்து டப்பிங் பேச அழைத்தார்கள். எனக்கு பதில் வேறு யாரையாவது வைத்து டப்பிங் பேச வைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பாலச்சந்தர் சார் என்னை பார்த்து, "நீ தான் டப்பிங் பேச வேண்டும். உன் குரல் நன்றாக இருக்கிறது. இதையே பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. டப்பிங் பேசுவதற்காக அவர்கள் குறிப்பிட்ட தினத்தன்று ஜெமினி ஸ்டுடிேயாவுக்கு புறப்பட்டு சென்றேன். அங்கு எனக்கு முன்பாகவே வந்து ஸ்ரீவித்யா, கமல் இருவரும் டப்பிங்கில் வசனத்தைப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
என்னுடைய டப்பிங் பேசும் முறை எப்போது வரும் என்று ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தேன். ஒரு லோ ஆங்கிள் ஷாட் என்னுடையது.
ஒரு ஆள் தாடி, கோட் போட்டு பேசிகிட்டிருந்தார். என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. அதன் பிறகுதான் தெரிந்தது அது நான் தான் என்று. என்னையே மறந்து பார்த்துக்கிட்டிருந்தேன். உடம்பு எல்லாம் சிலிர்த்தது.
டப்பிங்கில் வசனம் சொல்வதை நான் மறந்து போய் நின்று விட்டேன். அந்த காட்சி 20 தடவையாவது ஓடி இருக்கும். என்னையே நான் திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் மீண்டும் மீண்டும் சிலிர்த்தது.
இப்படி திரையில் பார்ப்பதற்கு தானே இத்தனை ஆண்டுகளாக தவமாக காத்துக்கிட்டு இருந்தேன். இதற்காக எவ்வளவு குழப்பங்கள். சந்தேகங்கள், சிரமங்கள், எதிர்ப்புகள், கஷ்டங்கள் தாங்கி இருக்கிறேன். என் நினைவை திசை திருப்பும் வகையில் திடீரென பாலசந்தர் சார் குரல் கேட்டது.
'என்ன வசனம் பேசிடுவோமா?' என்றார்.
அப்போதுதான் நான் எங்கே இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சுயநினைவுக்கு வந்து உணர்ந்தேன்.
பாலசந்தர் சாருக்கு ரொம்ப பிடிவாதம். என் சொந்தக் குரலைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று என்னை திருத்தி மாத்தி, அடிக்கிறதைத் தவிர அன்பால் என்னைத் தட்டி வேலை வாங்கி சரி ெசய்தார். படம் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளிவரப் போகிறது என்றார்.
எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சி பூகம்பமே வெடித்து விடும் போல் இருந்தது. அதன் பிறகும் பாலச்சந்தர் சார் மூலம் எனக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
என் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த மாற்றம் பற்றி திங்கட்கிழமை (13-ந்தேதி) பார்க்கலாம்.