ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- வியாழக்கிழமை நடிப்பு ஆரம்பம்!
- அபூர்வராகங்கள் படத்தில் என்னுடைய வேடம் என்ன என்பது பற்றி பாலச்சந்தர் சார் எனக்கு மிகவும் விளக்கமாக சொன்னார்.
- என்னுடைய கேரக்டர் எனக்கு புரிந்தது.
டைரக்டர் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு தளம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சிவாஜிராவ் அங்கு காரில் வந்து இறங்கியதும் அந்த பங்களாவையும், திரைப்பட தயாரிப்பு பணியாளர்களையும் சற்று மிரட்சியுடன் பார்த்தார்.
பாலச்சந்தர் சிரித்தபடியே வரவேற்ற பிறகுதான் அவருக்கு சற்று நிம்மதியும் உற்சாகமும் ஏற்பட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பொம்மை சினிமா இதழில் சிவாஜிராவ் கொடுத்த பேட்டியைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். அந்த பேட்டி தொடர்கிறது.
அபூர்வராகங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஸ்ரீவித்யா, நாகேஷ் இருவரையும் பாலச்சந்தர் சார் அழைத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் நான் வணக்கம் தெரிவித்தேன்.
அதன் பிறகு அபூர்வராகங்கள் படத்தில் என்னுடைய வேடம் என்ன என்பது பற்றி பாலச்சந்தர் சார் எனக்கு மிகவும் விளக்கமாக சொன்னார். நான் அந்த படத்தின் கதையையும் என்னுடைய வேடத்தின் பொறுப்பையும் உன்னிப்பாக கவனித்து கேட்டேன்.
"நீங்க ஸ்ரீவித்யா புருஷன். முதல்லே நீங்க 2 பேரும் காதலர்கள். கதையை நாங்க பிளாஷ் பேக்கில் காண்பிக்கிறோம். உங்களுக்கு திடீரென பிளட் கான்சர் நோய் வந்து விடுகிறது. அந்த நோய் வந்திருக்கிறது என்பது காதலிக்கு தெரியக் கூடாது என்பதற்காக அவளை விட்டுவிட்டு நீங்க ஓடிப் போயிடறீங்க.
அதன் பிறகு கமலுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அவர்கள் கல்யாணத்துக்கு தயாராகும் நேரத்தில் நீங்க வந்து விடுகிறீர்கள்.
தனது காதலி இன்னொரு வரை நேசிப்பதை தெரிந்துக் கொண்டு அவர்களை வாழ்த்தி இறந்து போறீங்க. இதுதான் உங்கள் கேரக்டர். அது தியாகமான கேரக்டர்.
இந்த வேடம் தமிழக ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும். இந்த வேடத்தில் மிக அருமையாக எப்படி நடிப்பது என்பது பற்றி நீங்களே யோசியுங்கள். அதை என்னிடம் சொல்லுங்கள். சிறப்பாக நடிக்க வேண்டும்" என்று டைரக்டர் பாலச்சந்தர் சொன்னார்.
என்னுடைய கேரக்டர் எனக்கு புரிந்தது. என்றாலும் இவ்வளவு நாள் பல்வேறு விதமாக நடித்து பார்த்ததை முதல் படத்திலேயே அமல்படுத்தி பார்த்தால் எப்படி இருக்கும் என்று என் உள் மனது சொன்னது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாலச்சந்தர் சாரிடம் அதுபற்றி கேட்டேன்.
சிகரெட்டை வாயில் ஸ்டைலா தூக்கிப் போடறது... விதவிதமாய் தீப்பெட்டியில் இருந்து குச்சியை எடுத்துக் கொளுத்தறது... இதையெல்லாம் பாலச்சந்தர் சார்கிட்டே செய்து காட்டினேன். 'இந்த ஸ்டைலை இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா சார்?" என்று கேட்டேன்.
ஆனால் பாலச்சந்தர் சார் அதை ஏற்கவில்லை. பொறுமையாக என்னிடம், "அடுத்த படத்தில் உங்களது இந்த ஸ்டைலை பண்ணிக்கலாம். இந்தப் படத்தில் வேண்டாம். அபூர்வராகங்கள் படத்தில் நீங்கள் புற்று நோயாளியாக நடிக்கிறீர்கள். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் இந்த படத்தின் கேரக்டருக்கு சூட் ஆகாது" என்றார்.
அப்படி அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே 'ஷாட் ரெடி' என்று உள்ேள இருந்து அழைப்பு வந்தது. இதோ வர்றேன்' என்று சொல்லிக் கொண்டே பாலசந்தர் சார் உள்ளே வேகமாக எழுந்து சென்று விட்டார்.
அவர் போனதும் மேக்கப் கலைஞர் சுந்தரமூர்த்தி என்னை வந்து அழைத்தார். 'மேக்கப் போடலாம் வாங்க சார்' என்றார். அவர் முன் போய் உட்கார்ந்தேன்.
ஒரு புற்று நோயாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப எனக்கு முதல் நாள் மேக்கப் போடப்பட்டது. என் முகத்தின் தோற்றத்தையே அன்று மேக்கப் கலைஞர் சுந்தரமூர்த்தி அருமையாக மாற்றி விட்டார்.
என் முகம் முழுவதும் பசை போட்டு தாடியை வலுவாக ஒட்ட வைத்தார். அப்படி வலுவாக தாடி ஒட்டிய பிறகு என்னால் சிரிக்கவும் முடியவில்லை. அழவும் முடியவில்லை. அந்த அளவுக்கு இறுக்கமாக இருந்தது.
அது மட்டுமல்ல ஒட்டு தாடியால் முகம் முழுவதும் ஒரே அரிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சுமார் 20 கிலோ எடையுள்ள கோட்டு ஒன்றை எடுத்து வந்தனர். அந்த கோட்டில் ஒரே வியர்வை நாத்தம். துவைச்சு எத்தனை வருஷங்களாச்சோ? எனக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.
தமிழ் சினிமா உலகம் பேச ஆரம்பித்ததில் இருந்து யார்-யாரோ அணிந்த கப்பு கோட் அது. மேக்கப் கலைஞர் சுந்தரமூர்த்தி காட்டிய கண்ணாடியில் முகம் பார்த்தேன். என்னையே எனக்கு அடையாளம் தெரியாமல் ேபாய் விட்டது. எனக்கு செய்யப்பட்ட அரிதாரம் எனக்குள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் என்ன இது முதன் முதலாக நடிக்கப் போகிறோம். பிச்சைக்காரன் மாதிரி வேஷமா போடணும் என்று மனதுக்குள் சென்டிமென்ட் இடித்தது.
அந்த சமயத்தில் சென்னையில் சரியான வெய்யில் காய்த்து எடுத்துக் கொண்டு இருந்தது. சூடு தாங்க முடியவில்லை. இதனால் ரிப்ளக்டா்ஸ் வேறு ெநருப்பு மாதிரி கொதித்தது. அந்த சமயத்தில் என் முகத்துக்கு மட்டுமின்றி உடம்பு முழுவதும் மேக்கப் போட்டிருந்தாங்க.
"சார் உங்க ஷாட் ரெடி. வரலாம்" என்று குரல் கேட்டது. அதை கேட்டதும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. "நாம ஏன் நடிக்க வந்தோம்' என்று மனம் அலை பாய்ந்தது. எனக்குத் தெரியாமலே உடம்பெல்லாம் நடுங்கியது. அது மட்டுமல்ல இன்னொரு குறையும் என் மனதில் இருந்தது. அன்று திங்கட்கிழமை. ஆனால் எனக்கு பிடித்த புனித நாள் வியாழன். எனவே என் முதல் நாள் கன்னி நடிப்பை குருவாரமான வியாழக்கிழமை தினத்தன்று படம் எடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன்.
ஆனால் வெளியில் சொல்ல முடியாதே. ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையும், அருளும் இருக்குமானால் நான் நடிக்கும் முதல் நாள் படப்பிடிப்பு வியாழன் அன்றே தொடங்கட்டும் என்று மனதுக்குள்ளாக மந்திரம் ஜெபித்தேன்.
ஓம் சகனா பவது
சகநவ் புனக்து
சக வீர்யம் கரவா வகை
தேஜஸ்வினா வதீத வஸ்து
மாவித்விஷா வகை ஹி
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.... என்று மனதுக்குள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தேன். எனது உறுதியான நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது.
கோட்டில் இருந்த தூசி காரணமாக தாங்க முடியாத அரிப்பால் சொறிய ஆரம்பித்தேன். 'எங்கேப்பா அந்த புதுமுகம். ரெடியா?' என்று பாலச்சந்தர் சார் கேட்டதும் அவர் முன்பு என்னை கொண்டு போய் நிற்க வைத்தார்கள் 'குட், கரெக்டா இருக்கான்' என்றார் அவர்.
திங்கள், செவ்வாய், புதன் 3 நாட்களும் சொல்லி வைத்தது போல் டைரக்டர் பாலச்சந்தர் சார் என்னை நடிக்க அழைக்கவில்லை. வியாழன் அன்றுதான் என் நடிப்புக்கான பகுதியை அவர் விளக்கினார். வசனம் மிக மிகக் குறைவு. அதற்கே நான் படாதபாடு பட்டேன். முதல் காட்சியிலேயே கமலோடு நடிக்கும் கற்கண்டு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திக்கு முக்காடி விட்டேன்.
முற்பகல் 11 மணி, தை மாத வெயில், கமலை மணந்து கொள்ள சம்மதம் என்பதன் அடையாளமாக ஸ்ரீவித்யா தன் படம் போட்ட சாவியை கமலிடம் கொடுப்பார். கமல் பூரிப்பின் காரணமாக மாடியில் நின்று கொண்டே அந்த சாவியை தூக்கிப் போட்டு பிடித்து... பிடித்து... விளையாடுவார்.
அப்போது திடீரென சாவிக் கொத்து கீழே விழுந்து விடும். மிக சரியாக அந்த சமயத்தில் நான் அந்த பங்களாவுக்குள் நுழைய வேண்டும். அதாவது அழுக்கான நாற்றம் தாங்க முடியாத கருப்பு கலர் கோட்டை சுமந்தபடி அந்த பங்களாவின் இரும்புக் கதவுகளைத் திறந்து கொண்டு நான் உள்ளே நுழைய வேண்டும்.
பிறகு கீழே விழுந்த சாவி கொத்தைக் குனிந்து எடுக்க வேண்டும். அப்போது கமல் என்னைப் பார்த்து விசாரிப்பார். அதற்கு நான் 'பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்" என்று சொல்ல வேண்டும். இந்த டயலாக்கைதான் முதல் முதலாக எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
என் சினிமா வாழ்க்கையின் முதல் டயலாக் அல்லவா? எனவே அந்த டயலாக்கை ஆயிரம் தடவைக்கு மேல் சொல்லி... சொல்லி... பயிற்சி எடுத்து பார்த்தேன். "டயலாக் ஓ.கே.யா" என்று ஆங்கிலத்தில் என்னிடம் கேட்டார்கள்.
அப்போது எல்லாம் என்னை சார் என்றுதான் கூப்பிடுவாங்க. நானும் அசட்டு சிரிப்பு சிரிச்சு ரெடி சார் என்று சொன்னேன். அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பதை நாளை பார்க்கலாம்.