சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ஜோதிடர் சொன்ன உறுதிமொழி!

Published On 2025-10-04 16:45 IST   |   Update On 2025-10-04 16:45:00 IST
  • நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது.
  • ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.

சிவாஜிராவின் தந்தை ரனோஜிராவ் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தார். தனது மகன் பற்றி ஜோதிடர் சொன்ன தகவல்களை அவரால் நம்ப முடியவில்லை. சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தனது மகன் எப்படி அதிசயம் நிகழ்த்தும் மனிதனாக மாறுவான் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டார்.

அவரது முகத்தில் தோன்றிய சந்தேகத்தை ஜோதிடர் அந்த வினாடியே புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே, "நான் சொல்வது உங்களுக்கு இப்போது நம்பிக்கை தராது. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மகன் ஜாதகம் மிக மிக அபூர்வமான ஜாதகம் ஆகும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளில் அவரது புகழ் பல கோடி மக்களால் பேசப்படும் அளவுக்கு மாறும் பாருங்கள்" என்றார்.

ஜோதிடர் சொன்னதை கேட்டதும் ரனோஜிராவுக்கு சிரிப்பாக வந்தது. மெல்ல சிரித்துக் கொண்டே, "அவன் கைவசம் இருந்த வேலையை விட்டுவிட்டு தெருவில் நிற்கிறான். அடுத்த வேளை உணவுக்கு கூட வழி இல்லை. அது தெரியுமா உங்களுக்கு?" என்றார்.

இதை கேட்டதும் ஜோதிடர், "நீங்கள் நான் சொல்வதை நம்புகிறீர்களோ இல்லையோ ஆனால் எதிர்காலத்தில் இந்த ஜாதகக்காரர் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் மனிதராக இருப்பார். அவரது ஜாதகத்தில் சூரியனும், வியாழனும் அமைந்து இருக்கும் அமைப்பு மிக மிக தனித்துவம் ஆனது. ரொம்ப அபூர்வமானது. ரொம்ப நாட்களுக்கு பிறகுதான் அபூர்வமான மனிதர்களுக்கு இத்தகைய கட்ட அமைப்பு கிடைக்கும். உங்கள் மகன் ஜாதகத்தில் அது இருக்கிறது" என்றார்.

ஆனால் அதையும் ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. அவரது முகத்தை வைத்து அவர் திருப்தி அடையவில்லை என்பதை புரிந்துக் கொண்ட ஜோதிடர் தொடர்ந்து சில நிமிடம் கண்களை மூடி தியானத்தில் மூழ்கினார். பிறகு அவர் ரனோஜிராவை பார்த்து தீர்க்கமான குரலில் பேசத் தொடங்கினார்.

"உங்கள் மகன் ஜாதகம் மிகவும் தனித்துவம் ஆனது. எனது அனுபவத்தில் இத்தகைய உயர்ந்த சிறப்பான ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. இந்த ஜாதகக்காரர் நாடு முழுவதும் புகழ் பெற்றவராக மாறுவார். நிச்சயமாக எனது கணிப்பு தப்பாது" என்றார்.

இதை கேட்டதும் ரனோஜிராவ் சிரித்தார். "அவனுக்கு இருந்த வேலையும் போய் விட்டதே" என்றார். உடனே ஜோதிடர், "இந்த ஜாதக அமைப்பைக் கொண்டவர் யாருக்கும் கீழ் வேலை பார்க்க மாட்டார். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் தலைவனாக இருப்பார். இதுதான் நடக்கும்" என்றார்.

ஆனால் ஜோதிடர் சொன்னதை ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. ஜோதிடர் ஏதோ சொல்கிறார் என்ற நினைப்புடன் புறப்பட்டு விடலாமா? என்ற மனநிலைக்கு அவர் வந்து இருந்தார். அவரது முகமாற்றத்தை பார்த்த ஜோதிடர் விடவில்லை. தொடர்ந்து பேசினார்.

"நான் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருகிறேன். லட்சக்கணக்கானவர்களின் ஜாதகத்தை கணித்து அலசி ஆராய்ந்து பார்த்து பலன்கள் சொல்லி இருக்கிறேன். எனது ஜாதக பலன்கள் தப்பியதே இல்லை. அப்படியே நடந்து வருகின்றன. அதனால்தான் என்னைத் தேடி பலரும் வருகிறார்கள்.

இதுவரை நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது. இப்படிப்பட்ட ஒரு ஜாதக அமைப்பை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு சிறப்பான அமைப்புடன் இந்த ஜாதகம் அமைந்துள்ளது" என்றார்.

இதை கேட்டதும் ரனோஜிராவுக்கு கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. ஜோதிடர் அடுத்து என்ன சொல்வார் என்று ஆவலோடு பார்த்தார். ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.

"உங்கள் மகன் ஜாதகம் பிரமிப்பு தருகிறது. உங்கள் மகன் ஜாதகத்தை பார்த்த உடனேயே நான் மிரண்டு போனேன். என்னால் சில விஷயங்களை கணிக்க முடியவில்லை. இப்போதும் கூட என் மனதில் அந்த குழப்பம் இருக்கிறது.

உங்கள் மகன் ஜாதகத்தை பொறுத்தவரை 2 விஷயங்கள்தான் நிச்சயமாக நடக்கும். ஒன்று உங்கள் மகன் இந்த நாட்டில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதராக மாறுவார். பணம், புகழ் எல்லாம் அவரிடம் கொட்டி கிடக்கும். அவரது வாழ்நாள் முழுக்க வெற்றிகளை பெற்றுக் கொண்டே இருப்பார். அவரது வெற்றிகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்றார்.

இப்படி சொல்லி விட்டு ஜோதிடர் ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு அமைதியாக இருந்தார். பிறகு ''இந்த ஜாதகக்காரர் மிகப்பெரிய சக்தியாக மாறாவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா?'' என்றார். அவரது இந்த கேள்வி ரனோஜிராவ் மனதுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.

"உங்களது மகன் அதாவது இந்த ஜாதகக்காரர் உலகம் புகழும் வகையில் செல்வமும், செல்வாக்கும் பெற வேண்டும் என்பது விதிக்கப்பட்ட விதியாகும். ஒருவேளை அதில் மாற்றம் ஏற்படுமானால் இந்த ஜாதகக்காரர் தனக்கு சொந்தமான எல்லா சொத்துக்களையும் உதறித் தள்ளி விட்டு சன்னியாசியாக போய் விடுவார். அதற்காக காட்டுக்குள் போய்விடுவார் என்று அர்த்தமல்ல. சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்று அவரது குணமும் மாறும். இவர்கள் எல்லோரையும் சேர்த்து எடுத்தது போல ஒரு மிக பெரிய மகான் ஆக மாறுவார். அதில் மாற்றமே இல்லை. இந்த இரண்டில் ஒன்றுதான் நடக்கும்" என்றார்.

ஜோதிடரின் குரல் கடைசியில் முடிக்கும்போது கம்பீரமாக கணீர் என்று இருந்தது. ரனோஜிராவ் அதைக் கேட்டு ஆடிப் போய் விட்டார். தனது மகன் ஒன்று கோடீஸ்வரன் ஆவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று ஜோதிடர் சொன்னதை கேட்டதும் அவருக்குள் பிரளயமே வெடித்தது போல இருந்தது. அவரால் ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.

அவரது உணர்ச்சிகளை கண்டு ஜோதிடர் புரிந்து கொண்டார். அவர் கூறுகையில், "உங்களுக்கு இப்போது என் மீது நிச்சயமாக நம்பிக்கை வராது. நான் சொல்வது நடக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஆழமாக இருக்கிறது. ஏனெனில் உங்களது வாழ்க்கை சூழ்நிலை அப்படி இருக்கிறது. ஆனால் இந்த ஜாதக அமைப்புப்படி நான் என்ன கணித்து சொல்லி இருக்கிேறனோ அதுதான் நிச்சயமாக நடக்கும். வெகு விரைவில் அதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.

அவரது குரலில் இருந்த உறுதியைப் பார்த்து ரனோஜிராவ் ஆச்சரியப்பட்டார். மற்றொரு பக்கம் அவருக்கு அதிர்ச்சியாக கூட இருந்தது. சிவாஜிராவ் மது அருந்தி விட்டு புகை பிடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கும் காட்சிகள்தான் அவரது மனத்திரையில் ஓடின. இப்படிப்பட்ட மகன் எப்படி உலகமே புகழும் கோடீஸ்வரனாக மாறுவான் என்று அவர் மனதில் ஒரு ஓரத்தில் கேள்வி எழுந்தது.

ஜோதிடரை அவர் நம்ப முடியாமல்தான் பார்த்தார். ஜோதிடரை நம்பாமல் தட்டு தடுமாறி எழுந்தார். ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் தட்சணையை தட்டில் வைத்து விட்டு எழுந்தார். அவரை வணங்கி விடைப்பெற்றார்.

அவர் விடைபெறும்போது ஜோதிடரை சந்தேக கண்ணுடன்தான் பார்த்தார். அதை ஜோதிடரும் புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே உங்கள் மகன் உலகம் புகழும் பணக்காரனாக, ஒரு மகான் ஆக மாறுவார் பாருங்கள் என்று சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னார். ஆனால் ரனோஜிராவ் அதை நம்ப முடியாமல் ஜோதிடர் வீட்டில் இருந்து வேக வேகமாக வெளியே வந்தார்.

வெளியில் தெருவில் இருந்து நடக்க தொடங்கியதும் தனது போலீஸ்கார நண்பரிடம் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார். அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கோபத்தில் வெளியில் வந்து கொட்டின.

"நான் என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்துக் கொண்டு இருக்கிறேன். கண்டக்டர் வேலை மீண்டும் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான் என் கேள்வி. ஆனால் அதற்கு அவர் விடையே சொல்லவில்லை.

கண்ணை மூடி தியானம் செய்து விட்டு ஏதேதோ உளறுகிறார். என் மகன் கோடீஸ்வரன் ஆகிவிடுவான், உலகமே அவனை புகழும் என்று எல்லாம் சொல்கிறார். நம்பும்படியாகவா இருக்கிறது? அவர் எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஜாதகத்தை நன்றாக பார்த்தாரா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

என் மகன் அடுத்த வேளை உணவுக்கே பிறரை நம்பி இருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். அவனை எப்படி வாழ வைக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. விரைவில் அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.

ஒழுங்காக நான் சொல்வதை கேட்டுக் கொண்டு இந்த கண்டக்டர் வேலையில் இருந்து இருக்கலாம். அதையும் தொலைத்து விட்டான். மெட்ராசுக்கு போய் சினிமாவில் நடிக்கப் போவதாக கனவு காண்கிறான். இது எல்லாம் நடக்கிற காரியமா?

அவனால் இப்போது என் நேரமும், பணமும்தான் வீணாகி போய் விட்டது. உன் பேச்சை கேட்டு இந்த ஜோதிடரிடம் நான் வந்தது தப்பு. என்னவெல்லாமோ சொல்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் நம்பும்படியாகவா இருக்கிறது?

இந்த ஜோதிடர் என் மகன் ஒன்று கோடீஸ்வரனாக மாறுவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று சொல்கிறார். அவன் எங்கே சாமியாராக போவான். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இந்த ஜோதிடர் என்னை பயம் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறாரோ என்னவோ? என்றார்.

ஆனால் சிவாஜிராவ் பற்றி வாழ்க்கையில் அந்த ஜோதிடர் கணித்தது நூறு சதவீதம் அப்படியே பலித்தது. சென்னைக்கு புறப்பட்டு வந்த சிவாஜிராவ் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தன.

அதுபற்றி 6-ந்தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.

Tags:    

Similar News