சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- கண்டக்டர் வேலையில் இருந்து நீக்கம்!

Published On 2025-10-02 16:15 IST   |   Update On 2025-10-02 16:15:00 IST
  • சிவாஜிராவை வித்தியாசமாக பார்த்த கண்டக்டர் ராஜ்,
  • டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக் கொண்டு கண்ணீர் மல்க சிவாஜிராவ் வெளியே வந்தார்.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவாஜிராவ் ஏறி அமர்ந்தார். அவர் மனது முழுக்க நாகேஸ்வரராவ் அனுப்பிய தந்தி மீதே இருந்தது. எதற்காக அண்ணன் அவசரமாக வரச்சொன்னார்? என்று அவருக்கு புரியவில்லை.

குடும்பத்தில் யாருக்காவது ஏதேனும் ஆகி இருக்குமோ? என்ற இனம்புரியாத பயம் அவருக்கு வந்தது. எதுவுமே புரியாத நிலையில் ரெயில் பெட்டி வாசல் பகுதியில் நின்று சிகரெட்டுகளை ஊதிக் கொண்டே இருந்தார். அவர் மனம் அவ்வளவு எளிதில் அமைதியாகவில்லை.

அருண் ஓட்டல் அறையில் உடைகள், பொருட்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி கிளம்பி வந்திருந்த அவருக்கு சிந்தனைகள் பலவிதமாக தோன்றின. சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எண்ணமும் அவரது மனதுக்குள் வந்து... வந்து... போனது.

தம் அடித்து முடிந்ததும் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார். எதிர் இருக்கையில் இருந்தவர் சிவாஜிராவை நட்புடன் பார்த்து சிரித்தார். "நான் உங்களை பெங்களூரில் பார்த்து இருக்கிறேனே?" என்றார். ஆனால் சிவாஜிராவுக்கு அவரை தெரியவில்லை.

என்றாலும் அந்த நபர் விடவில்லை. சிறிது நேரம் கழித்து மெல்லிய குரலில் நீங்கள் பெங்களூர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிகிறீர்களா? என்று கேட்டார். அதன் பிறகுதான் அவர் தன்னை பஸ்சில் கண்டக்டராக பார்த்து இருப்பார் என்பது சிவாஜிராவுக்கு புரிந்தது. அவருடன் பேசிக் கொண்டே இருந்தார்.

அந்த நபர் தனது மகன் பி.எஸ்.சி. படித்து விட்டு 4 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பதாகவும் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலைக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறினார். அதோடு அந்த கண்டக்டர் வேலை தன் மகனுக்கு விரைவில் கிடைப்பதற்காக திருப்பதி ஏழுமலையானை கண்டு வழிபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்டக்டர் வேலையை நாம் எவ்வளவு சாதாரணமாக நினைத்து விட்டோம். அந்த வேலைக்கு படித்தவர்கள் மத்தியில் கூட இவ்வளவு ஆர்வம் இருக்கிறதா? என்று வியந்தார். நல்ல வேலை கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்று மனதுக்குள் சற்று ஆறுதல் பட்டுக் கொண்டார்.

மேலும் சிறிது நேரம் அந்த நபரிடம் சிவாஜிராவ் பேசிக் கொண்டே இருந்தார். அவர் தூங்கச் சென்ற பிறகு சிவாஜிராவுக்கு தனிமையில் விடப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவருக்கு தூக்கம் வரவில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்தார். அப்போது அவருக்குள் ஒரு தீர்க்கமான முடிவு தோன்றியது. அதாவது சினிமாவில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காவிட்டால் கவலைப்படக் கூடாது.

கண்டக்டர் வேலையை வைத்தே காலத்தை ஓட்டி விடவேண்டியதுதான் என்று ஒரு முடிவுக்கு வந்தார். குழம்பிய குட்டை போல் இருந்த அவரது மனநிலை தெளிந்த நீரோடைப் போல மாறி இருந்தது. சென்னையில் யாரும் நடிக்க வாய்ப்பு தராவிட்டால் சினிமா மோகத்தை மனதில் இருந்து அகற்றி விடவேண்டும் என்ற எண்ணம் அவரது மனதுக்குள் உறுதியானது. மேலும் திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்ததை கெட்ட கனவு போல நினைத்து மறந்து விட வேண்டும் என்று தோன்றியது. அந்த நினைவிலேயே சிவாஜிராவ் தூங்கிப் போனார்.

மறுநாள் அதிகாலை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூர் ரெயில் நிலையத்தை சென்று அடைந்தது. ரெயில் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சிவாஜிராவ் டவுன் பஸ்சில் ஏறி அனுமந்தராவ் நகருக்கு புறப்பட்டார். அந்த பஸ்சில் அவருக்கு நன்கு பழக்கமான ராஜ் என்பவர் கண்டக்டராக இருந்தார். அவருக்கு சிவாஜிராவை பார்த்ததும் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. "என்ன சிவாஜி எப்போது வந்தாய்?" என்று கேட்டார். அதற்கு சிவாஜிராவ், "இப்போது தான் சென்னையில் இருந்து ரெயிலில் வந்து இறங்கினேன். வீட்டுக்கு போய்க் கொண்டு இருக்கிறேன்" என்றார்.

சிவாஜிராவை வித்தியாசமாக பார்த்த கண்டக்டர் ராஜ், "சென்னையில் நடிப்பு பயிற்சி பெற சென்று இருந்தாயே? சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு சிவாஜிராவ், "இல்லை. படிப்பு முடிந்து விட்டது. ஆனால் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று கூறினார்.

இதை கேட்டதும் கண்டக்டர் ராஜ் முகம் மாறியது. அவர் சிவாஜிராவை பார்த்து, "உனக்கு பெங்களூரில் நமது போக்குவரத்து கழகத்தில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாதா?" என்றார். அதற்கு சிவாஜிராவ், "என்ன நடந்தது? எனக்கு எதுவும் தெரியாதே" என்றார். உடனே கண்டக்டர் ராஜ், "நமது போக்குவரத்து கழகத்தில் சரியாக வேலைக்கு வராத 12 கண்டக்டர்களை நிரந்தரமாக வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். அந்த 12 கண்டக்டர்களில் உன் பெயரும் உள்ளது. உத்தரவும் போட்டு விட்டார்கள்.

உனக்கு இந்த தகவலே தெரியாதா?" என்று கேட்டார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கண்டக்டர் வேலையைப் பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையுடன் வந்த தனக்கு இப்படி ஒரு சோதனையா?" என்று நினைத்தார்.

அவர் மனம் அவரிடம் இல்லை. உலகமே இருண்டு போனது போல இருந்தது. ராகவேந்திரரை நினைத்து மனதுக்குள் உருகினார். ராகவேந்திரர் நிச்சயமாக தன்னை கைவிட மாட்டார் என்று உறுதியாக நம்பினார். ஆனால் அவரையும் மீறி மனதுக்குள் அழுத்தம் ஏற்பட்டது.

கண்டக்டர் வேலை பறிபோனதை அவரால் ஜீரணிக்க இயலவில்லை. தனது அண்ணன் இதற்காகதான் தன்னை அவசரமாக பெங்களூருக்கு வருமாறு தந்தி கொடுத்து அழைத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்.

அதற்குள் பஸ் அனுமந்தராவ் நகர் வந்து இருந்தது. பஸ்சில் இருந்து இறங்கிய சிவாஜிராவ் வீட்டை நோக்கி நடந்தார். அவரது மனம் சோர்வாகி போய் இருந்ததால் வழக்கமான துள்ளல் நடை இல்லாமல் தளர்ந்த நடையாக மாறி இருந்தது. கவலையோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் தந்தை ரனோஜிராவும், அண்ணன் நாகேஸ்வரராவும் சற்று வித்தியாசமாக நடந்துக் கொண்டனர். நல்ல கண்டக்டர் வேலையை அநியாயமாக பறி கொடுத்து விட்டதாக பேசத் தொடங்கினார்கள். தந்தை ரனோஜிராவ் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

"நான் எவ்வளவோ சொன்னேனே கேட்டாயா? சென்னைக்கு போய் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர வேண்டாம் என்று எத்தனை தடவை சொன்னேன். நீ இருக்கும் கறுப்புக்கு உன்னை எப்படி நடிகராக ஏற்றுக் கொள்வார்கள். இப்போது அங்கும் உனக்கு எதுவும் வேலை இல்லை. இங்கிருந்த வேலையும் போய்விட்டது. என்ன செய்ய போகிறாய்?" என்று சூடாக கேட்டார்.

அண்ணன் நாகேஸ்வரராவ் சிறிது நேரம் புத்திமதி சொல்லி விட்டு, "போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளை உடனே போய் பார். எப்படியாவது வேலையை தக்க வைத்துக் கொள்" என்று கூறினார். சிவாஜிராவ் மனது மீண்டும் பயங்கரமாக படபடப்புக்குள்ளானது. குளித்து முடித்து விட்டு நேராக பெங்களூர் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு ஓடினார். அங்கிருந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கெஞ்சினார். ஆனால் எந்த அதிகாரியும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

நீண்ட விடுமுறையில் சென்றதால் இனி வேலைக்கு வைத்துக் கொள்ள இயலாது. உன்னுடைய இடத்துக்கு புதிதாக ஆள் எடுத்து விட்டோம் என்றும் நீ போகலாம் என்றும் கறாராக சொன்னார்கள். அது மட்டுமின்றி சிவாஜிராவ் மீது போக்குவரத்து கழக அதிகாரிகள் பலருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஒரு தடவை செக்கிங் இன்ஸ்பெக்டர் ஒருவரை சிவாஜிராவ் கடுமையாக தாக்கி காயப்படுத்தி இருந்தார். மற்றொரு தடவை போக்குவரத்து கழக அலுவலகத்துக்குள் மது குடித்து விட்டு கும்மாளம் போட்டதாக புகார் இருந்தது.

இந்த புகார்களை எல்லாம் போக்குவரத்து கழக அதிகாரிகள் பட்டியல் போட்டு வாசித்தனர். அவர்களிடம் சிவாஜிராவ் எவ்வளவோ விளக்கம் அளித்தார். ஆனால் அதிகாரிகள் கேட்கவில்லை. வேலையில் இருந்து நீக்கியது நீக்கியதுதான். இனி ஒன்றும் செய்ய இயலாது என்று கை விரித்து விட்டனர். டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக் கொண்டு கண்ணீர் மல்க சிவாஜிராவ் வெளியே வந்தார்.

பஸ் டெப்போவில் இருந்த ஊழியர்கள் அவரை பரிதாபமாக பார்த்தனர். இதை கண்டதும் சிவாஜிராவ் துடித்துப் போனார். சில ஊழியர்கள் நெருங்கி வந்து துக்கம் விசாரிப்பது போல விசாரித்தனர். சில ஊழியர்கள் இதுதான் சமயம் என்று சிவாஜிராவை ஏளனமாக பேசினார்கள். மெட்ராசுக்கு போய் சினிமாவில் நடிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு இருந்தான். இவன் மூஞ்சை சினிமாவில் யாரால் பார்க்க முடியும். அதனால்தான் விரட்டி இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் இப்போது இங்கு வந்து இருக்கிறான் என்று ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டே பேசினார்கள்.

சிவாஜிராவ் காதுகளில் அவர்கள் பேசிய ஏளனமான பேச்சு தெள்ளத் தெளிவாக கேட்டது. அதைக் கேட்டதும் சிவாஜிராவ் மனதுக்குள் ஆவேசம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. இதுபற்றி சிவாஜிராவ் அளித்த ஒரு பேட்டியில், "என்னை பஸ் டெப்போவில் அனைவரும் பரிதாபமாக பார்த்த பார்வை தாங்கிக் கொள்ள முடியாதபடி இருந்தது. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தால் கூட தாங்கிக் கொள்வேன். பரிதாப பார்வையை தாங்க முடியவில்லை. எனவே அன்றே சென்னைக்கு புறப்பட மனதில் உறுதிக் கொண்டேன்" என்று கூறி இருந்தார்.

பஸ் டெப்போவில் இருந்து வீட்டுக்கு வந்த அவர் அன்று இரவே பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரெயில் ஏறி விட்டார்.

அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News