சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- தெருவில் படுத்துத்தூங்கிய சிவாஜிராவ்!

Published On 2025-09-15 13:10 IST   |   Update On 2025-09-15 13:10:00 IST
  • தங்கும் விடுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை.
  • சிவாஜிராவால் அப்படி பேரம் பேசியவர்களிடம் தொடர்ந்து பேச இயலவில்லை.

திரைப்படக் கல்லூரியில் முதல் நாள் அறிமுக வகுப்பு சிவாஜிராவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. சினிமாவில் சாதித்தே தீரவேண்டும் என்ற ஆர்வமும், நம்பிக்கையும் சிவாஜி ராவிடம் தணியாத தாகமாக இருந்தது. அதனால்தான் அவர் அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து இருந்தார்.

2 ஆண்டு நடிப்பு பயிற்சிக்காக அந்த திரைப்படக் கல்லூரிக்கு 3 மாதத்துக்கு ஒரு தடவை 500 ரூபாய் கட்டணமாக கட்ட வேண்டும். முதல் 3 மாதத்திற்கான கட்டணத்தை சிவாஜிராவ் செலுத்தி விட்டார்.

கல்லூரி கட்டணம் போக தங்குவதற்கான இடத்துக்கு வாடகை கொடுக்க வேண்டும். தினசரி சாப்பிட வேண்டும். மற்ற செலவுகள் இருக்கிறது. அவற்றையும் சமாளித்து படிக்க வேண்டும்.

இவ்வளவு நிர்ப்பந்தங்களுடன் சிவாஜிராவ் திரைப்படக் கல்லூரி வாழ்க்கையை தொடங்கி இருந்தார்.

முதல் நாள் அறிமுகம் முடிந்ததும் கல்லூரி முதல்வர் நாளை முறைப்படி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்து விட்டு புறப்பட்டதும் மற்ற மாணவர்களும் கலைந்து சென்று விட்டனர்.

சிவாஜி ராவுக்கு எங்கு போவது என்றே தெரியவில்லை? ஏனெனில் சென்னையில் தங்குவதற்கு அவர் எந்த ஏற்பாடுகளும் செய்யாமல்தான் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து இருந்தார். எனவே முதல் நாளே வாடகைக்கு வீடு தேடும் படலத்தை ஆரம்பித்தார். திரைப்படக் கல்லூரிக்கு அருகில் வீடு கிடைத்தால் நடந்தே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் அந்த பகுதி முழுக்க தெரு தெருவாக சென்று வாடகைக்கு வீடு இருக்கிறதா? என்று பார்த்தார்.

ஆனால் எங்குமே வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. தங்கும் விடுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை. அதிக கட்டணம் கேட்பார்கள் என்பதால் முதல் நாளே சிவாஜி ராவ் தவித்துப் போனார். சிகரெட்டை புகைத் தப்படியே நடந்த அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை. இதனால் அன்று இரவு அவர் அண்ணா சாலையில் நடைபாதையிலேயே தங்கி விட்டார். இரவு முழுக்க அங்கேயே படுத்துத் தூங்கினார். கடுமையான கொசுக்கடிக்கு மத்தியில் நள்ளிரவுக்கு பிறகுதான் தூக்கமே வந்தது.

அடுத்த நாள் அதிகாலை எழுந்து அந்த பகுதியிலேயே காலை கடன்களை முடித்து விட்டு தயாரானார். நடைபாதை ஓரத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தை கழுவி உடை மாற்றி விட்டு புறப்படத் தயாரானார். அங்கிருந்து நடந்தே திரைப்படக் கல்லூரிக்கு வந்து சேர்ந்து விட்டார்.

 

அன்று.... திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி தொடங்கியது. மொத்த பயிற்சிக்கு 36 பேரும் ஒரே இடத்தில் இருந்தனர். மொழி வாரியாக பயிற்சி நடக்கும்போது மட்டும் அமர்முல்லா, சந்திரஹால், ரகுநந்தன், ரவீந்திரநாத், சிவாஜிராவ், வேணுகோபால் ஆகிய 6 பேரும் கன்னட மொழி வகுப்பில் இருந்தனர்.

முதல் நாள் சிவாஜி ராவ் மற்றவர்களிடம் அவ்வளவாக பேசவில்லை. தாழ்வு மனப்பான்மையோ என்னவோ அவர் மற்றவர்களிடம் இருந்து சற்று விலகியே இருந்தார். வகுப்பில் முதல் நாள் அவரிடம் அமைதி காணப்பட்டது. மற்ற மாணவர்கள் கன்னடத்தில் ஒருவருக்கு ஒருவர் சிரித்துப் பேசி ஜாலியாக இருந்தனர். அப்போது ரகுநந்தன் தாமாக முன்வந்து முதல் நபராக சிவாஜி ராவிடம் பேச்சுக் கொடுத்தார். "என் பெயர் ரகுநந்தன். ரகு என்று சுருக்கமாக கூப்பிடலாம்.

நான் உடுப்பியில் இருந்து வருகிறேன். உங்களைப் போன்றுதான் நானும் கர்நாடகாவில் இருந்து வந்து இருக்கிறேன். நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாம்" என்றார். சிவாஜிராவுக்கு இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. "நான் பெங்களூரில் இருந்து வந்து இருக்கிறேன். கண்டக்டராக வேலை பார்த்தேன்" என்று ரகுநந்தனிடம் சொல்லி சிறு அறிமுகம் செய்து கொண்டார். அதன் பிறகு ரகுவிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

அப்போது கன்னட மொழி பிரிவில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் அமைந்தகரையில் உள்ள அருண் ஓட்டலில் (இப்போது அந்த இடத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது) அறை எடுத்து தங்கி இருப்பதாக தெரிய வந்தது. மற்ற மொழி பிரிவில் உள்ள மாணவர்களும் அந்த ஓட்டலில் இருப்பதாக சிவாஜிராவ் அறிந்துக் கொண்டார்.

ஆனால் ஓட்டலில் தங்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று நினைத்தார். மேலும் திரைப்படக் கல்லூரி அருகில் சிறிய அறை எதுவும் கிடைத்தால் போக்குவரத்து செலவு இருக்காது என்று நினைத்தார். எனவே அருண் ஓட்டலில் தங்குவதற்கு அவர் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் 2-வது நாளும் திரைப்படக் கல்லூரி வகுப்பு முடிந்ததும் மாலையில் வீடு தேடும் படலத்தை ஆரம்பித்தார். 4 சட்டை -பேண்ட் கொண்ட கைப்பையை எடுத்துக் கொண்டு தெரு தெருவாக அலைந்து வாடகைக்கு வீடு தேடினார். அப்போது சிவாஜி ராவுக்கு 3 விதமான இடையூறு உருவானது. முதலில் அவரிடம் திருமணம் ஆகி விட்டதா? என்று கேட்டனர். சிவாஜி ராவ் இல்லை என்றதும் பேச்சுலருக்கு வீடு கொடுப்பது இல்லை என்று சொல்லி வைத்தது போல எல்லோரும் மறுத்து விட்டனர். விடுதிகளிலும் கூட அவருக்கு இதே நிலைதான் ஏற்பட்டது.

2-வது அவருக்கு அறை கொடுக்க முன் வந்தனர். ஆனால் சினிமா துறையில் இருப்பதை அறிந்ததும் உடனடியாக மறுத்து விட்டனர். சினிமா துறையினர் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற பயம் அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை இருக்கத்தான் செய்கிறது.

3-வது இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காதவர்கள் அதிக வாடகை கேட்டனர். அறையில் தங்குவதற்கு ஒருவர் சிவாஜி ராவிடம் 120 ரூபாய் வாடகை கேட்டார். முன் பணமாக 10 மாத வாடகை தொகையான 1,200 ரூபாயை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். சிவாஜிராவால் அப்படி பேரம் பேசியவர்களிடம் தொடர்ந்து பேச இயலவில்லை.

இப்படி 3 விதமான சிக்கல்களை சந்தித்த சிவாஜிராவுக்கு 2-வது நாளும் சென்னை தெருவில் படுத்து தூங்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டது. 3-வது நாளும் அவருக்கு தெருவோர நடைபாதை தான் படுக்கையாக இருந்தது. தெருவில் படுத்து காலையில் தெருவோர குழாயில் குளித்து திரைப்படக் கல்லூரிக்கு சென்று வந்தார்.

3-வது நாள் இரவு தெருவோர நடைபாதையில் படுப்பதற்கு பயந்து பூங்கா ஒன்றுக்குள் சென்று பார்த்தார். அங்கு ஆங்காங்கே நீளமான சிமெண்ட் பெஞ்சுகள் இருந்தன. அதில் ஒரு பெஞ்சில் ஏறி படுத்தவர் அப்படியே தூங்கி விட்டார்.

இரவு 8 மணிக்கு பூங்கா காவலாளி தட்டி எழுப்பினார். "தம்பி 8 மணிக்கு பூங்காவை பூட்ட வேண்டும். வெளியே போங்க" என்று கூறினார். வேறு வழி இல்லாமல் மீண்டும் சிவாஜி ராவ் தெரு வோர நடைபாதைக்கு வந்து தூங்க ஆரம்பித்தார்.

திரைப்படக் கல்லூரி கேண்டினில் சாப்பிட்டதால் முதல் 3 நாட்களுக்கு சாப்பாடு பிரச்சினை இல்லாமல் இருந்தது. 4-வது நாள் சிவாஜி ராவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. சரியான தூக்கம் இல்லை.... சரியான சாப்பாடு இல்லை... எங்கு போய் தங்குவது என்று ஒவ்வொரு பகுதியாக நடந்து கொண்டே இருந்தார்.

அதிர்ஷ்டவசமாக அன்று ஒரு விடுதியில் அவருக்கு சாதகமான பதில் கிடைத்தது.

அந்த விடுதியின் கீழ் தளத்தில் ஒரு அறை இருப்பதாக சொல்லி தங்கிக் கொள்ளும்படி கூறினார்கள். சிவாஜி ராவுக்கு மகிழ்ச்சி தாங்கிக் கொள்ள முடிய வில்லை. ஆனால் உள்ளே சென்ற பிறகுதான் அதிர்ச்சி காத்து இருந்தது.

அந்த அறையின் ஒரு ஓரத்தில் அடுப்பு வைத்து இருந்தனர். அதில் இருந்து கடுமையான வெப்பமும், புகையும் வந்து கொண்டே இருந்தது. அங்கு சமையல் வேலை நடந்தது. அதன் அருகில் சற்று தொலைவில் இருந்த இடத்தில் சிவாஜி ராவ் படுத்து தூங்கிக் கொள்ளும்படி கூறினார்கள்.

குறிப்பிட்ட ஒரு சிறு தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு காலையில் டிபன், இரவில் சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறி இருந்தனர். இதனால் அந்த அறையில் இருந்த விறகு அடுப்பின் வெப்பத்தை தாங்கிக் கொண்டு அங்கேயே தங்கிக் கொள்ள சிவாஜிராவ் முடிவு செய்தார்.

அங்கிருந்தபடியே அவர் திரைப்படக் கல்லூரிக்கு சென்றுவர ஆரம்பித்தார்.

திரைப்படக் கல்லூரி சிவாஜிராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதி மரமாக மாற ஆரம்பித்தது. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருரகமாக இருந்தனர். சில மாணவர்கள் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். கன்னட மொழி பிரிவு வகுப்பு மாணவர்களில் வேணுகோபால் மட்டும் நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்திருந்தார். பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை நிலையில் இருந்து ஒருவித ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் திரைப்படக் கல்லூரிக்கு வந்து இருந்தனர்.

முதல் வாரத்திலேயே இதை சிவாஜிராவ் உணர்ந்தார். தன்னைப் போல பல மாணவர்கள் வாழ்க்கையில் கஷ்டத்துடன் போராடி இந்த கல்லூரிக்கு வந்து இருப்பதை அறிந்தார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மாணவர்களிடமும் சிவாஜிராவ் பழகத் தொடங்கினார்.

சில விஷயங்கள் மட்டும் மற்ற மாணவர்களிடம் இருந்து சிவாஜி ராவை வித்தியாசப்படுத்தியது. சிவாஜி ராவ் எப்போதும் புகை பிடித்துக் கொண்டிருப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். மற்ற மாணவர்கள் அந்த அளவுக்கு புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கவில்லை.

பெரும்பாலான மாணவர்கள் திரைப்படக் கல்லூரிக்கு வரும்போது நல்ல உடை அணிந்து வந்தனர். ஆனால் சிவாஜிராவிடம் நான்கே நான்கு ஜோடி உடைதான் இருந்தது. அதில் ஒரு உடை கண்டக்டர் உடை. அந்த கண்டக்டர் உடையையும் அணிந்துக் கொண்டு அவர் வகுப்புக்கு செல்லத் தொடங்கினார். முதலில் மற்ற மாணவர்கள் இதை ஒரு மாதிரியாக பார்த்தனர். சிவாஜி ராவ் மட்டும் நான்கு உடைகளை மாற்றி மாற்றி போடுவதை உன்னிப்பாக கவனித்தனர். ஆனால் சிவாஜி ராவ் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

அவரிடம் இருந்த ஒரே எண்ணம் மிகப்பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான். அந்த லட்சிய உணர்வோடு அவர் தினமும் வகுப்புக்கு வந்து கொண்டு இருந்தார். அந்த லட்சியம் அவர் மனதில் மிகப்பெரிய உறுதியாக மாறி இருந்தது. ஆனால் கையில் பணம் இல்லாதது அவரை வாட்டி வதைத்தது. எனவே விடுமுறை நாளில் பெங்களூருக்கு சென்று வேலை பார்க்கலாமா? என்று யோசித்தார்.

இதில் என்ன முடிவு எடுத்தார் என்பதை நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News