2025 - ஒரு பார்வை

2025 REWIND: கூட்ட நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள்... கரூர் துயரத்திற்கு பிறகாவது கற்றது என்ன?

Published On 2025-12-14 08:00 IST   |   Update On 2025-12-14 08:01:00 IST
  • கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
  • அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.

கூட்ட நெரிசல்..!

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை வடமாநிலங்களில் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததா என்றால் அது கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

அதன்பிறகு அரசியல் வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் இதுவரை இல்லாத மிகவும் சோகமான, கருப்பு நாளாக 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி மாறியது.

தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி மக்கள் சந்திப்பு என்ற அரசியல் பரப்புரை கூட்டங்களை நடத்தி வந்தார். அதன்படி, 27-ந்தேதி சனிக்கிழமை மதியம் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றுவதை காண காலை முதலே மக்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

 

குறுகிய இடத்தில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். மேலும் காலை முதல் தண்ணீர், உணவு ஏதுமின்றி வெயிலில் இரவு வரை காத்திருந்ததுதான் கொடுமை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வராத விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்து மக்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசும்போதே கூட்டத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் பேசிமுடித்துவிட்டு சென்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சம்பவ இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூட்ட நெரிசல் குறித்து தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலில் கரூர் நகர காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. எனினும் இவ்வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டது.

 

இதனை தொடர்ந்து, விசாரணையை தொடங்கி நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் போது இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா, மூச்சுத் திணறி இறந்தார்களா, அல்லது அதிர்ச்சியில் இறந்தார்களா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு த.வெ.க.வினரே முழு காரணம் என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், த.வெ.க.வினரோ ஆளும் கட்சியின் சதிதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகிறது.

எது, எப்படியோ... கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் எவராலும் மறக்கமுடியாத துயர நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிகழ்விற்கு பிறகு மக்கள் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.

மேலும் அரசியல் சார்ந்த கூட்டமோ, இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் சரி முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கடந்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், மக்கள் என அனைவரும் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர். எனினும், இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Tags:    

Similar News