தீபாவளி வாழ்த்து சொன்ன ரங்கசாமி- புதுச்சேரியில் கவர்னர், முதல்வரிடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வருமா?
- முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.
அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.