புதுச்சேரியில் சுட்டெரித்த வெயில்- இரவில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் தினமும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.26 டிகிரி பாரன்ஹீட பதிவானது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.
இதன் காரணமாக, 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடியே சென்றனர்.