புதுச்சேரி

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்-மழை வெள்ள சேதத்தை கண்காணிக்க சென்சார் கேமராக்கள்

Published On 2025-01-24 10:17 IST   |   Update On 2025-01-24 10:17:00 IST
  • புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
  • வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.

ஏற்கனவே புதுச்சேரியில் சாலைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் நாள்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் வாகன ஓட்டிகள் அல்லாடி வருகின்றனர்.

இதையடுத்து புதுச்சேரி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கேமராக்கள் மூலம் கண்டறிந்து ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நகரின் முக்கிய இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமார் 450 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அரியாங்குப்பம், வில்லியனூர், மேட்டுப்பாளையம், கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதியில் வாகனங்கள் வரும் பகுதிகளை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இதற்கான கட்டுப்பாட்டு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கிருந்தபடியே ஊழியர்கள் கண்காணித்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன எண்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதேபோல் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை கண்டறிந்து, உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாது மழையின்போது புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும் முயற்சியாக மழைக்காலங்களில் முன்கூட்டியே வெள்ள அளவை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக சாலைகள், கழிவு நீர் வாய்க்கால்களை கண்காணிக்கவும் கேமரா பொருத்தப்படுகிறது. அதாவது, வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

அதன்மூலம் மழை வெள்ளம் அதிகரிக்கும்போது தாழ்வான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News