சாலையோரத்தில் காரிலேயே அமர்ந்து காலை உணவை சாப்பிட்ட புதுச்சேரி முதல்-அமைச்சர்
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததாலும் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- வெயிலில் பொதுமக்கள் காத்திருந்ததை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது காரை சாலையின் ஓரமாக நிறுத்தும்படி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி எளிமையான முதல்-அமைச்சர் என அனைவராலும் போற்றப்படுபவர். முன் அனுமதி இல்லாமல் அவரை எந்த நேரத்திலும் பொதுமக்கள் சந்திக்கலாம்.
அதோடு பொது மக்களுக்கு இடையூறாக தனது காருக்கு முன்பாக பாதுகாப்பு வாகனம் செல்லக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் நேற்று ரூ.2 கோடிக்கு மேல் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
சண்முகாபுரம் கலையரங்கம் அருகே கைப்பந்து மைதானம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த போது விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததாலும் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் முதல்-அமைச்சர் வந்த வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. உடனே போலீசார் முதல்-அமைச்சர் வாகனம் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர முயன்றனர்.
அப்போது, வெயிலில் பொதுமக்கள் காத்திருந்ததை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது காரை சாலையின் ஓரமாக நிறுத்தும்படி கூறினார். மேலும் அருகில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை அழைத்து பொதுமக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்தை சீரமைக்குமாறு கூறினார்.
மேலும் தொடர் நிகழ்ச்சி காரணமாக உணவு சாப்பிட நேரம் இல்லாததால் போக்குவரத்தை சரி செய்யும் வரை, காலை உணவை காரில் அமர்ந்தபடியே முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்டார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து வியந்தபடி சென்றனர்.