புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட படகுகள்.

புதுச்சேரி காலாப்பட்டில் 25 செ.மீ. கொட்டிய கனமழை - கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட படகுகள், மீன் வலைகள்

Published On 2025-10-22 13:42 IST   |   Update On 2025-10-22 13:42:00 IST
  • கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது.
  • கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

புதுச்சேரி:

புதுவையில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக புதுவை காலாபட்டில் சுமார் 25 செ.மீ. வரை மழை பதிவானது. இந்த பகுதியில் சின்ன காலாப்பட்டு மீனவ கிராமத்தில் மேட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் கடல் நோக்கி வந்தது.

இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. இதேபோல் மீன்பிடி வலைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீனவர்கள் போராடி படகுகளை மீட்டனர்.

இருப்பினும் 5-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் சென்றன. 50-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி உள்ளதாகவும், ரூ.1 கோடி மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது. இதனால் குளக்கரையின் ஒரு பகுதி சரிந்தது.

இதனை இன்று காலை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேலும் மண் சரிவு ஏற்படாதவண்ணம் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார்.

கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கணபதிசெட்டிக்குளம் பிள்ளையார் கோவில் குளம் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் சாலையோரத்தில் மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இந்த பகுதியில் நிரந்தரமாக தூண்டில் முன் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News