புதுச்சேரி
null

புதுச்சேரி - வங்கியில் திடீர் தீ விபத்து: கோடிக்கணக்கான பணம் தப்பியது

Published On 2025-09-16 09:41 IST   |   Update On 2025-09-16 09:50:00 IST
  • விபத்தில் கேஷ் கவுண்டரில் இருந்த பணம் எண்ணும் எந்திரம், ஏ.சி. மெஷின், மேஜை, நாற்காலி போன்றவை முழுமையாக எரிந்தன.
  • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரி நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் தனியார் வங்கி உள்ளது.

நேற்று மாலை பணி முடிந்ததும் இந்த வங்கியை வழக்கம் போல் ஊழியர்கள் பூட்டி சென்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு வங்கியின் உள்ளே இருந்து புகை வந்தது. இதனை பார்த்த வங்கி நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளி உடனடியாக அவசர போலீஸ் 100-க்கு டெலிபோன் செய்து தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அருகில் உள்ள ஒதியன்சாலை போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதனிடையே தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

விபத்தில் கேஷ் கவுண்டரில் இருந்த பணம் எண்ணும் எந்திரம், ஏ.சி. மெஷின், மேஜை, நாற்காலி போன்றவை முழுமையாக எரிந்தன.

மேலும் அவற்றின் மீது வைக்கப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகின. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

அதே நேரத்தில் வங்கியில் பணம் வைக்கும் அறைக்கு தீ பரவாமல் அணைக்கப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் தீயில் இருந்து தப்பின.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில் கேஷ் கவுண்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தால் புதுச்சேரி நகர பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News