புதுச்சேரி

நாடு முழுவதும் போலி செயலியை விற்று ரூ.8 கோடி மோசடி செய்த என்ஜினீயர் கைது

Published On 2025-05-20 14:51 IST   |   Update On 2025-05-20 14:51:00 IST
  • மோசடி செய்தவர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ் என்பது தெரியவந்தது.
  • சென்னையில் முகாமிட்ட போலீசார் சென்னை ஓ.எம்.ஆர். பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.

புதுச்சேரி:

உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் மோசடி தொடர்பாக எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்கள் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். பண ஆசை காட்டி ஏமாற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் ஆன்லைன் டிரேடிங்கிற்கு செயலி இருப்பதாகவும், அதுவே தானாக முதலீடு செய்து ஒரு லட்சத்துக்கு மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை லாபம் சம்பாதித்து தரும் என சமூகவலைத்தளத்தில் பரவியது. இதை பார்த்த பலர் அந்த செயலியை பெற்றனர்.

புதுவையில் 100-க்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பெற்றனர். இதற்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டணம் செலுத்திய பின் அந்த செயலி வேலை செய்யவில்லை. இதனால் செயலியை விற்றவரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி நபரை கண்டறிந்தனர்.

மோசடி செய்தவர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ் (வயது32) என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், புதுவை மட்டுமின்றி, நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் போலி செயலியை விற்று சுமார் ரூ.8 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். சென்னை சோழிங்கநல்லுாரில் அவர் மறைந்திருந்தது தெரிய வந்தது. அவரை பிடிக்க சென்றபோது, செல்போன் சென்னையில் பல இடங்களில் இருப்பதாக காட்டியது.

சென்னையில் முகாமிட்ட போலீசார் சென்னை ஓ.எம்.ஆர். பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 லேப்டாப், ஒரு சொகுசு கார், ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் ரொக்க பணம் மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதில் சிறப்பாக செயல்பட்டு மோசடி நபரை கைது செய்த சைபர்கிரைம் போலீசாரை சீனியர் எஸ்பி நாராசைதன்யா பாராட்டினார்.

Tags:    

Similar News