பஞ்சாபில் ராணுவத்துக்கு உதவ குவிந்த இளைஞர்கள்- பெண்கள்
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 வாரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சண்டிகர்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் ராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில நிர்வாகங்கள் கோரி வருகின்றன. அதன்படி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள போலீஸ் துணை கமிஷனர், 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் தன்னார்வலர்களாக உடன டியாக பதிவு செய்து ராணுவத்துக்கு உதவுமாறு கூறி இருந்தார்.
அதற்கான பதிவு பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து இன்று காலை முதலே இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அந்த பகுதிக்கு வரத் தொடங்கினார்கள். 100-க்கணக்கானோர் அந்த பகுதியில் கூடி தங்களின் பெயர்களை பதிவு செய்து இந்திய ராணுவத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
அவர்களுக்கு பயிற்சி அளித்து ராணுவ வீரர்களுக்கு உதவ எப்படி பயன்படுத்தப்படுவார்கள் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 வாரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு பிறகு எங்கெங்கு பதட்டமான சூழல் இருக்கிறதோ அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு போலீசாருக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி, பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட், சினிமா தியேட்டர், ரெயில் நிலையங்களில் இந்த தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.