இந்தியா

காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன்: எடியூரப்பாவுக்கு டி.கே.சிவக்குமார் பதிலடி

Published On 2023-04-27 03:25 GMT   |   Update On 2023-04-27 03:25 GMT
  • கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
  • மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

மைசூரு :

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-

எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.

இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.

அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.

வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News