இந்தியா

பஹல்காமில் கணவனை இழந்த பெண்களுக்கு வீரம் இல்லை - பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு!

Published On 2025-05-25 15:35 IST   |   Update On 2025-05-25 15:35:00 IST
  • கைகூப்புவதற்கு பதிலாக கணவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுடன் போராடியிருக்க வேண்டும்
  • பாஜக தலைவரும் அமைச்சருமான குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்றார்.

பஹல்காம் தாக்குதல் அதைத்தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பின்னணியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து  பாஜக எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றனர்.

தங்கள் கணவர்களை விட்டுவிடுமாறு கெஞ்சிய பிறகும் பயங்கரவாதிகள் கருணை காட்டவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.யான ராம்சந்தர் ஜாங்கிரா, கூட்டம் ஒன்றில் பேசுகையில், "அங்கே எங்கள் சகோதரிகள் இருந்தனர். அவர்களின் மாங்கல்யம் பறிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு வீராங்கனை போல எண்ணவில்லை, உற்சாகம் இல்லை, போராட்ட உணர்வு இல்லை.

அதனால்தான் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாதிகளிடம் மன்றாடுவதற்குப் பதிலாக, உங்கள் கணவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுடன் போராடியிருக்க வேண்டும்" என்று ஜாங்கிரா தெரிவித்தார். 

பாஜக எம்.பி. ஜங்ராவின் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக தலைவர்கள் நமது வீரர்களையும் பெண்களையும் அவமதிப்பதைப் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்தனர்.

முன்னதாக மத்தியப் பிரதேச பாஜக தலைவரும் அமைச்சருமான குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பேசியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News